திருவருகைக்கால 01ம் வார ஞாயிறு


திருவருகைக்கால 01ம் வார ஞாயிறு



“இறுதிக்காலம் இதுவே“ - மத்தேயு 24 : 37 – 44
திருவருகைக் கால முதலாம் ஞாயிறிலிருந்து அன்பின் ஆண்டின் திருவழிபாட்டு ஆண்டை தொடங்குகிறோம். அன்று இஸ்ரயேல் மக்கள் தளைகளிலிருந்து தங்களை விடுவிக்க மெசியா பிறப்பார் என ஆவலோடு காத்திருந்தார்கள். இயேசுவின் வருகைக்குப்பின் தொடக்க காலத்திருச் சபையிலிருந்து நாமனைவரும் எமது மீட்பராம் ஆண்டவர் இயேசுவின் இரண்டாம் வருகைக் காகக் காத்திருக்கின்றோம்.
இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு மனிதனாக அவதரித்த இயேசு மீண்டும் பிறக்கமாட்டார். மாறாக, அவர் நம்மைத் தீர்ப்பிட வெற்றியின் அரசாராக வர இருக்கிறார். அவரது வருகைக்காக நாம் காத்திருக்க வேண்டும். காத்திருத்தல் என்பது நம் அன்றாட வாழ்வில் இரண்டறக் கலந்துவிட்ட ஒன்றாகும். காத்திருத்தல் அனைத்தும் நமக்குச் சுகமாக அமைவதில்லை. ஆனால் காத்திருத்தலின் சுகம் யாருக்காக எதற்காகக் காத்திருக்கிறோம் என்பதைப் பொறுத்ததாகும்.
இத்திருவருகைக் காலத்தில் நாம் தாய்த்திருச்சபையோடு இணைந்து எமது ஆண்டவர் இயேசுவின் முதல் வருகையை நினைவுகூர்ந்து கொண்டாடினாலும், அவரது இரண்டாம் வருகைக்காகத் தயார்படுத்த நம்மைத் தூண்டுகிறது. இதனை மனதில் இருத்த வேண்டியது கத்தோலிக்கர்கள் எனப் பெருமையோடு எம்மை அழைக்கும் எமது மிகப்பெரிய கடமையாகும்.
திருவருகைக்காலம் எனப்படுவது. கிறிஸ்து பிறப்பு விழாவைக்கொண்டாட ஆன்மீக ரீதியாக எம்மைத் தயாரிக்க அன்னையாம் திரு அவையால் எமக்கு வழங்கப்பட்டுள்ள காலமாகும். இக்காலத்தில் மட்டுமல்ல எக்காலத்திலும் சமாதானம், அமைதி, நட்புறவு, மனித நேயம், பகிர்வு என்பன எம்மிடையே நிலவிட எம்மை நாமே ஆரய்ந்து பார்க்க அழைக்கப்பட்டுள்ளோம்.
திருவருகைக்கால முதல் ஞாயிறு நற்செய்தி “இறுதிக்காலம் இதுவே“ என்பதனை நாம் ஒவ்வொரு வரும் ஆழமாக உணர்ந்திட (மத்தேயு24:37–44) எக்காலத்திலும் விழிப்பாயிருப்பதோடு, எல்லாம் வல்ல பரம்பொருளான இறைவன் எமக்குத்தரும் அளவற்ற ஆசீர்வாதங்களைப் பெற்று நிறை வாழ்வு வாழ அழைக்கின்றதென்பது எனது பனிவான அபிப்பிராயமாகும்
திருவருகைக்கால முதல் ஞாயிறு நற்செய்தியை (மத்தேயு24:37–44) ஆழமாக நோக்குமிடத்து நவீன கணனி யுகத்தில் அதிவேகத்தில் ஓடிக்கொண்டிருக்கும் நாம், கானல் நீரெனத் தோண்றும் இவ்வுலக மாயக்கவர்ச்சி களால் கவரப்பட்டு அலைமோதாது, எல்லாம் வல்ல இறைவனை நோக்கித் திரும்ப எம்மை அழைக்கின்றதெனக் கருதவும் இடமுண்டு.
மாற்றம் ஒன்றே மாறாதது எனப்படும் இக்காலத்தில், மனமாற்றம் எமது அனைத்துச் செயற் பாடுகளிலும் பெரிதும் எதிர்பார்க்கப்படுகின்றது. மனமாற்றம் எனப்படுவது ஒன்றைவிட்டு வேறொன்றிற்குத் திரும்புவதாகும். இவ்வாறு திரும்பும்போது நம் உள்ளத்தில் வேரூண்றுகின்ற ஒரு நல்ல பண்புதான் ''விழித்திருத்தல்'' எனக் கற்றறிந்தோர் தெரிவிப்பார்கள்.
“விழித்திருத்தல்“ எனப்படுவது நித்திரை மறந்து கண் விழித்திருத்தல் எனக்கருதினாலும், விழிப்பாயிருக்க வேண்டும் என்பது இவ்வுலகம் விரைவில் அழியப்போவதால், தயாராக இருக்க வேண்டும் என்று மட்டுமல்ல, இறையாட்சிக்கு எதிரான களியாட்டம், குடிவெறி, கூடா ஒழுக்கம், காமவெறி, சண்டைச்சச்சரவு ஆகியவற்றைத் தவிர்த்து, தீய இச்சைகளைத் தூண்டும் ஊனியல்பின் நாட்டங்களுக்கும், நாம் விழிப்பாயிருக்க வேண்டுமெனவும் கருதலாம்.
விழிப்பாயிருப்போர் தூக்க மயக்கமில்லாது ''எதிர்பார்ப்பு'' மனநிலையோடு வாழ்வார். அப்போது அவரைத் தேடிவருகின்ற வீட்டுத் தலைவரை (கடவுளை) அவர் உடனடியாக எழுந்து (மத்தேயு24:44) வரவேற்பார் எனவும் நற்செதியை நாம் வேறு விதமாகப் பொருள் கொள்ளலாம். எனவே, நாம் தயாராக இருக்க வேண்டும். எந்தநேரத்திலும் முடிவு வரலாம் ஆதலால், இறுதிக்காலம் இதுவென ''விழித்திருக்க'' வேண்டும் என்பதாகக் கருதலாமல்லவா?.
......“அமைதிக்குரிய வழியை அறியாமல் ஆண்டவனை அடையாளம் கண்டுகொள்ளாமல் வாழ்ந்த எருசலேம் நகரைப்போலவே இன்றும் இறைவனை அடையாளம் காண விரும்பாமல் நாம் வாழ்கிறோம் ..... .ஒவ்வொரு நாளும் நம் வாழ்வில் குறுக்கிட்டு, நம் இதயக் கதவைத் தட்டி நிற்கும் ஆண்டவரை அடையாளம் காண மறுத்து வாழ்கிறோம் .......நம்மில் எத்தனை பேர் அன்றாட வாழ்வைத் திரும்பிப்பார்க்க ஆன்ம ஆய்வு மேற்கொள்கிறோம்...“ என்று திருத்தந்தை பிரான்சிஸ் 2016 நவம்பர் 17ம் திகதிய மறையுரையில் எடுத்துரைப்பதனை நாம் கருத்தில் எடுக்கவேண்டும்.
நம்மைத் தேடி ஒவ்வொரு நாளிலும், நொடியிலும் வருகின்ற கடவுளை நாம் அன்போடேற்று, அவருடைய வழிநடத்தலில் பயணித்தால், எல்லாம் வல்ல கடவுளின் உடனிருப்பு நம்மைவிட்டு ஒருபோதும் மறைவதில்லை என நாம் ஆழமாக உணரவேண்டும். சுனாமிப் பேரழிவு, மற்றும் கொடிய யுத்தத்தில் எம்மைத்தேடி வந்த கடவுளை நாம் கண்டு கொண்டோமா? ''ஏனெனில் நீங்கள் நினையாத நேரத்தில் மானிட மகன் வருவார்'' (மத்தேயு 24:44) என்று அழியா வார்த்தைகளால் நற்செய்தி எம்மை எச்சரிக்கின்றது.
நாம் எம்மைப்பற்றிய சுய சிந்தனையிலே மூழ்கி என்னுடைய தனிப்பட்ட சுகம், இன்பம் என்பன குறித்தே கவலைப்படுகிறோம். உண்பதும், உடுப்பதும், குடிப்பதும், கும்மாளமடிப்பதும், பெண்கொள்வதும், கொடுப்பதும் வாழ்க்கை என வாழ்ந்தால் ஆதியிலே வெள்ளப் பெருக்கால் அழிந்தது போல அழிவோம் என்பது உறுதியென நற்செய்தியில் எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.
நற்செய்தி தெரிவிப்பதுபோல எமது அழிவு எப்போதென எமக்குத் தெரியாது. ஏனெனில் வயலில் இருக்கும் இருவரில் ஒருவர் எடுத்துக் கொள்ளப்படுவதும், மற்றவர் விடப்படுவதும் அவர்களுக்கே தெறியாது. திரிகையில் மாவரைக்கும் இருவருள் ஒருவர் எடுத்துக் கொள்ளப்படுவதும், மற்றவர் விட்டுவிடப்படுதும் (மத்தேயு24:40–41) யாரும் அறியார்.
இவ்வுல வாழ்வில் சுகபோகமே வாழ்க்கையென வாழ்ந்தால் மகிமையும், மாட்சியும் நிறைந்த "ஆண்டவரின் நாள்" வேதனையும், விரக்தியும் நிறைந்ததாகிவிடும். ஆண்டவரின் மாட்சியை, மகிமையைக் காணும் ஆசீர் பெற்ற நோவா குடும்பம்போல எமது குடும்ப வாழ்வும் அமைய வேண்டாமா? ஆண்டவருக்குள் வாழும் குடும்பம் அழிவிலிருந்து பாதுகாக்கப்படும் என்பதே அன்பின் ஆண்டின் திருவருகைக்கால முதல் ஞாயிறு எமக்கு விடுக்கும் செய்தியாகும்.
அற்ப மனிதரான நாம் இவ்வுலக மாயைகளை விட்டுத் ''திரும்புவது'' மிக மிக அவசியமாவதோடு, நாம் கடவுளை நோக்கித் திரும்பும்போது நம் உள்ளத்தில் வேரூண்று கின்ற நல்ல பண்புதான் ''விழித்திருத்தல்'' என்பதாகும். எனவே, இறுதிக் காலம் இதுவே என்பதனை ஆழமாக உணர்ந்து ஏற்றுக்கொண்டு, விழிப்பாயிருந்து இறைவன் தரும் அளவற்ற ஆசீர்வாதங்களைப் பெற்று நிறைவாழ்வு வாழ திருவருகைக்கால முதல் ஞாயிறு நாளில் வரம் வேண்டிடுவோம். உணர்ந்து நடப்போம். நிலைவாழ்வைப் பெற்றுக்கொள்வோம்.

Comments

Popular posts from this blog

நீயும் நானும் (ஆழமான அன்புறவினைத்தேடி ......)

திருவருகைக் கால வளையம் - Advent wreath

✠ புனிதர் ஃபிரான்சிஸ் சவேரியார் ✠ (St. Francis Xavier)