நீயும் நானும் (ஆழமான அன்புறவினைத்தேடி ......)
நீயும் நானும் (ஆழமான அன்புறவினைத்தேடி ......)
அன்பிற்கினிய
என் உறவுகளே! "நீயும்
நானும்" என்ற தலைப்பில் உங்களோடு ஆழமான அன்பு நிறைந்த வாழ்விற்கு அடிப்படையாக அமையும் உறவுமுறை பற்றி உங்களுடன் பேசலாம் என எண்ணுகின்றேன். முதலில்
இந்த உரையாடலை வாசிப்போம்.
கொழும்பு பேருந்து
தரிப்பு நிலையத்தில் ஒரு பேருந்து நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. பயணிகள் பலர் பேருந்தில் ஏறுகின்றனர். ஒரு இளம் யுவதி ஒருவரும் பேரூந்தில் நுழைந்து ஓர் ஆசனத்தில் அமர்கின்றார். அவருடைய ஆசனத்தில்
அருகில் உள்ள ஆசனம் வெறுமையாக உள்ளது. சிறிது நேரம் கழித்து ஒரு இளைஞன் ஒருவன் பேரூந்தில் நுழைந்து அந்த ஆசனத்தில்
அமர்கின்றார். பேரூந்து புறப்படுகின்றது. முதலில் இருவரும் அமைதியாக இருக்கின்றார்கள். சிறிது நேரத்தில் இருவருக்குமிடையில் உரையாடல் ஆரம்பமாகின்றது.
இளைஞன்:-
ஹலோ ! குட் மோர்னிங்
யுவதி:-
ஹாய் ! குட் மோர்னிங்
இளைஞன்:-
நீங்க எங்க போறீங்க?
யுவதி:- இப்ப
தான் வேலை முடிஞ்சு போற நான் ...
(பொது வலயம்)
இளைஞன்:-
நேற்று தேசிய அடையாள அட்டை புதுப்பிக்க போயிருந்தேன். நிறைய சனம், அதனால் எனது வேலையை செய்ய முடியவில்லை. அடுத்த மாதம் போக வேண்டியுள்ளது.
யுவதி:- நானும்
நேற்று தான் போயிருந்தேன். எனக்கு தெரிந்த நண்பர் ஒருவர் இருக்கிறார். அவர் மூலமாக நான் எனது வீசாவை புதுப்பித்துக்கொண்டேன்
அடுத்த
மாதம் போகும் போது சொல்லுங்கள், முடிந்ததவரை உதவி செய்கின்றேன்.
இளைஞன்:- நன்றி!
உங்கள் உதவிக்கு, என்ர பெயர் றொனிஷ். உங்கட பெயர் ?
யுவதி:- என்ர
பெயர் நிறோஜா.
இளைஞன்:- அழகான
பெயர், எங்கட அம்மாவுக்கு சுகம் இல்லை. நவலோக வைத்திய
சாலையில் இருக்கிறார்கள். இப்போது அங்கு தான் செல்கின்றேன்.
யுவதி:-
ஐயோ! நான் மிகவும் வருந்துகின்றேன்.
சமூக வலயம்
( யுவதி
தனது பயணப்பையைத் திறந்து ஏதோ ஒன்றை எடுக்கின்றார். அது ஒரு புகைப்பட ஆல்பம், அதை அவர் எடுத்து பார்க்கின்றார். மீண்டும் உரையாடல் தொடங்குகின்றது. இருவரும் இன்னும் கொஞ்சம் நெருக்கமாகின்றார்கள்.)
இளைஞன்:- ( புகைப்பட
ஆல்பத்தை பார்த்துக்கொண்டு) இது நீங்களா? இதில் நீங்க ரொம்ப அழகாக இருக்கிறீங்க? இது எங்க எடுத்தது?
யுவதி:- ஓ..!
ரொம்ப தேங்க்ஸ்
. இது நாங்கள் கடற்கரையில் எடுத்தது.
இளைஞன்:- இது
யாரு?
யுவதி:- ( சிறிய
வெட்கத்துடன்) ஓ, அதுவா ! அது
வந்து அது எனது காதலன், மிகவும் அழகானவர். ஆனால் நாங்கள் இப்பொழுது கதைப்பது கிடையாது. நான் அவரில் மிகவும் நம்பிக்கை வைத்திருந்தேன். ஆனால் இப்பொழுது அவரை கைவிடவேண்டியுள்ளது.
இளைஞன்:- ஏன்
அப்படி சொல்கிறீர்கள். கொஞ்சம் பொறுமையாக இருந்து பாருங்களேன். சிலவேளை அவர் அதிக வேலைப்பளுவாக இருக்கலாம்.
யுவதி:-
அப்படி ஒன்றும் இல்லை. அவர் விசுவாசமானவர் இல்லை. நான் அவரை மிகவும் நம்பி நேசித்தேன். அவருக்கு வேறு பல பெண் நண்பிகள்
இருக்கிறார்கள். நீங்களும் அப்படியா?
இளைஞன்:-
( அவமானப்பட்டவாறு ஆனாலும் சுதாகரித்துக்கொண்டு) இது எல்லாம் உங்கள் இவருடைய உறவு முறையில் தான் தங்கி இருக்கின்றது.
யுவதி:-
ஆம் நாங்கள் மிகவும் நெருக்கமான உறவு கொண்டிருந்தோம். ஆனாலும் அவர்..............
இளைஞன்:- ( அதைப்பற்றி
கவலைப்பட வேண்டாம். அவரை விட உங்களுக்கு வேறு ஒரு நல்ல காதலன் கிடைப்பார்.உங்கள் வாழ்வு மகிழ்ச்சியாக அமையும். (இருவரும் மேலும் நெருக்கமாகின்றார்கள்)
யுவதி:-
(சிரித்துக்கொண்டு) அது சரி ஆனாலும், நாம் பாதணிகள் மாற்றுவது போல காதலரை மாற்றிக்கொண்டு இருக்க முடியாது, றொனிஷ்.
சாரதி:-
வெள்ளவத்தை சந்தி இறக்கம்
.............
யுவதி:-
றொனிஷ் நான் போய்ட்டு வாறன். உங்களை சந்தித்ததில் மிகவும் மகிழ்ச்சி. உங்கட அம்மாவ கேட்டதாக சொல்லவும்.
இளைஞன்:-
ஓகே! நிரோஜா, நன்றி உங்கட (வட்ஸ் அப்) நம்பரை தாருங்கள்.
யுவதி:-
நிச்சயமாக, இதுதான் எனது நம்பர்.
இளைஞன்:-
நன்றி, நாங்கள் அடிக்கடி தொடர்பு கொண்டு பேசலாம்.
யுவதி:-
சந்திப்போம், தனிப்பட்ட
வலயம்
இந்த
உரையாடலைப் படித்திருப்பீர்கள், இப்பொழுது நமது விடயத்திற்கு வருவோம். இந்த உரையாடல் எப்படி அமைந்திருந்தது? முன் பின் அறிமுகமில்லாத இவர்களின் உறவு நிலை எப்படியிருந்தது? மிக குறுகிய காலத்திலேயே அவர்களின் உறவு மிகவும் நெருக்கம் ஆகியிருந்ததை ஏற்றுக்கொள்ளலாமா?
இக்கேள்விக்
கணைகளோடு, உங்களை ஆழமான உறவு முறை எப்படி அமைய வேண்டும் என சிந்திக்க அழைப்பு
விடுக்கிறேன். அத்தோடு இங்கே தடித்த எழுத்தில் உள்ள பொது வலயம்,
சமூக
வலயம்,
தனிப்பட்ட
வலயம்
இதனுடன் சேர்த்து நெருக்கமான
உறவின்
வலயம்
இந்த சொற்றொடர்களை அடியொற்றியே நமது உறவின் பயணம் ஆரம்பமாகின்றது. இன்றைய சமுதாயத்திலே கணவன்- மனைவி , காதலன்- காதலி, நண்பன்- நண்பி, இவர்களுடைய உறவு முறை எப்படி அமைகின்றது. இன்று பணத்திற்காகவும், பதவிக்காகவும், அழகிற்காகவும் "உறவு " கொச்சைப்படுத்தப்படுகின்றதை,
நாளாந்தம் பத்திரிகைகளிலும் , இணையத்தளங்களிலும் பார்க்கின்றோம். அண்மையில் நான் படித்த ஒரு விசித்திரமான சம்பவம் ஒன்றை உங்களுடன் பகிர்கின்றேன். திறேஷி எமின் எனப்படும் ஒரு பெண்மணி ஒரு அழகான கற்பாறையை திருமணம் செய்து கொண்டார். நீங்கள் ஏன் ஒரு பாறையை திருமணம் செய்து கொண்டீர்கள்? என பத்திரிகை நிரூபர்கள்
வினவிய போது அவர் கூறியது: இது என்னை விட்டு ஒருபோதும் அகலப்போவது இல்லை. என்னுடன் ஒருபோதும் எதிர்த்து வாதிடாது. என்னை ஒருபோதும் அடிமைப்படுத்தாது. நான் எந்த ஆண்நண்பர்களுடன் நட்புக்கொண்டிருந்தாலும் அதைப்பற்றி அது கவலைபடாது. அதுமட்டுமல்ல அது வேறு எந்தப் பெண்ணையும் உற்று நோக்காது. இது ஓர் நவீனக்காதல் என்றாராம். இதனை வாசிக்கும் போது உங்களுக்கு சிரிப்பாக இருக்கும். யாருடா இவ? ஒருவேளை கல்லுக்கு பிறந்திருப்பாளோ என்று கூட நீங்கள் கேட்கலாம். ஆனாலும் இந்த சம்பவம் நம்மை சிந்திக்கவும் வைக்கின்றது. அதாவது இன்று மனித சமுதாயத்திலே ஆழமான அன்புடன் கூடிய நிலையான பரோஸ்பரமான உறவு முறை என்பது கேள்விக்குறி ஆகி நிற்கின்றது.
அன்றாட
வாழ்க்கையிலே ஏற்படுகின்ற பிரச்சனைகளை தாங்கிக்கொண்டு சீரிய உறவுடன் வாழ பலர் அச்சப்படுகிறார்கள். ஒருவருக்கொருவர் பிரமாணிக்கத்துடன் வாழ்கின்ற நம்பிக்கையான உறவு கிடைப்பது அரிதாகி விட்டது. நாளாந்தம் நம்பிகைத்துரோகங்கள் நாலாபக்கமும் அரங்கேறுகின்றது. ஆழமான அன்புநிறைந்த
உறவுடன் வாழும் மனப்பக்குவத்தை பெறுவதற்கு முன்னமே பலர் திருமணம் செய்து விவாகரத்தும் வாங்கி விடுகின்றார்கள், மற்றும் சிலர் மறுமணமும் செய்து விடுகின்றார்கள். இதனால்
பலர் தனிமையாகவே வாழ விரும்புகின்றார்கள். அப்படியானால் இதற்கான தீர்வுதான் என்ன? ஆழமான அன்பு கொண்ட உறவுடன் வாழ வழிமுறைகள் தான் என்ன? என்று நீங்கள் கேட்பது புரிகின்றது. என்னால் முடிந்தவரை உறவு முறை பற்றி விளக்க முயல்கின்றேன்.
இங்கே உள்ள வரிப்படத்தைக் கொண்டு உறவு நிலை பற்றி உங்களுக்கு விளக்கலாம் என நினைக்கிறேன். இங்கு
முதலாவாதாக காணப்படும் பொது
வலயம் எப்படியான உறவு முறையைக் கொண்டிருக்கின்றது என்று பார்ப்போமேயானால் இது ஒரு மேலோட்டமான
உறவு முறையை குறிக்கும். அதாவது ஒருவர் ஒருவரை முதலாவதாக சந்திக்கின்ற பொழுது நாம் கொள்ளுகின்ற உறவு நிலையைக் குறிக்கும். சில வேளைகளில் இந்த உறவு முறை ஒருவரை ஒருவர் வாழ்த்துவதில் நிறைவு பெறும். முதன் முதலாக ஒருவரை பேரூந்தில் அல்லது புகையிரதத்தில் அல்லது ஒரு பொதுக்கூட்டத்தில் கண்டு அவர்களுடன் உரையாடும் போது இந்த உறவுமுறையே காணப்படுகின்றது.
இரண்டாவதாக காணப்படும் வலயம் ஆனது, சமூக வலயம் என்று அழைக்கப்படுகின்றது. இங்கே காணப்படுகின்ற உறவு நிலையானது பொது வலயத்தை விட நெருக்கமானது. இந்த சமூக வலயத்தில் நம்முடன் ஒரே வகுப்பில் படித்தவர்கள், சங்கங்கள், மன்றங்கள் அல்லது விளையாட்டு குழுக்களில் இருப்பவர்கள், ஒரே இடத்தில் வேலை செய்பவர்கள் ஆகியோர் அடங்குவர். இந்த சமூக வலயத்தில் நமது உறவு நிலை வெறும் வாழ்த்துடன் நிறைவு பெறுவதில்லை மாறாக நாம் ஒருவருக்கொருவர் உரையாடுவோம். அவர்களது பெயர், அவர்களது சொந்த இடம் ஆகியவற்றை அறிந்து வைத்திருப்போம். ஓர் சிறந்த உதாரணம் உங்கள்
பங்குகளில் காணப்படும் இளைஞர் ஒன்றியம் மற்றும்
அதன் அங்கத்தவர்களையும் குறிப்பிடலாம். இங்கு
ஆழமான உறவு நிலை காணப்படாவிட்டாலும் பொது வலயத்தில் காணப்படும் உறவுநிலையை விட மேலான
உறவு காணப்படும்.
மூன்றாவதாக காணப்படும் வலயம் ஆனது தனிப்பட்ட வலயம் என அழைக்கப்படுகின்றது. இங்கே உறவு
நிலையானது இரண்டாவது சமூக வலயத்தை விட மிக நெருக்கமாக காணப்படும். அதாவது எமது குடும்ப உறவுகள் மற்றும்
நமது உயிர் நண்பர்கள் ஆகியோரைக் குறிப்பிடலாம். இங்கு ஒருவர் ஒருவருக்கிடையில் அன்பும்
நம்பிக்கையும் மேலோங்கிக் காணப்படும். அத்துடன் இங்கு நாம் எமது இன்ப துன்பங்களையோ அல்லது எமது உள்ளார்ந்த பிரச்சினைகளையோ, இரகசியங்களையோ பயமின்றி
பகிர்ந்து கொள்வோம். இந்த தனிப்பட்ட வலயத்தில்
நம்பிக்கையின் கூடிய உறவு காணப்படுவதை அவதானிக்கமுடியும். உதாரணத்திற்கு உங்கள் தாய் தந்தை, உங்கள்
சகோதர சகோதரிகள், உங்கள் உறவினர்கள் மற்றும் உங்கள் நெருங்கிய நண்பர்கள் ஆகியோருடன்
அன்புடன் கூடிய உறவைப் பேணுவீர்கள் தானே, அத்துடன் உங்களுக்கு மிகவும் பிடித்தமானவர்களுடன்
உங்களது இரகசியங்களைக் கூட பகிர்ந்து கொள்வீர்கள்
தானே. இதுதான் இந்த தனிப்பட்ட வலயத்தில் அடங்குகின்ற உறவு முறை.
அடுத்த கட்டமாக இருப்பது நான்காவது வலயமானது நெருக்கமான உறவின் வலயம் என அழைக்கப்படும். இங்கே
ஆழ்ந்த அன்புறவு காணப்படும். இந்த வலயத்தில் உள்ளவர்கள் அதிகமாக காதலர்கள் தான்.இங்கே ஒருவருக்கொருவர் இடையில் மிகுந்த நம்பிக்கையுடன் கூடிய அன்பு இருக்கும். இந்த வலயத்தில் உள்ளவர்கள் ஒருவர் மற்றவரைப்பற்றி முழுமையாக அறிந்து வைத்திருப்பார்கள். அவர்களுடைய வாழ்க்கை முறை, பலம், பலவீனம் எல்லாவற்றையும் அறிந்து இருப்பர். இப்படியாக இவர்கள் தங்களுக்கிடையில் ஒரு ஆழமான உறவு கொண்டிருப்பதை காண முடியும். பொதுவாக இந்த வலயத்தை அடைவதற்கு ஏறக்குறைய ஒருவருட கால அவகாசமாவது எடுத்துக்கொண்டால் நல்லது. இங்கே ஆழ்ந்த உறவு காணப்பட்டாலும், உடல் ரீதியான உறவு வைத்துக்கொள்வது தவறானது. இப்படியான தவறான செயல்களால் நம்பிக்கைத்துரோகங்கள், ஏமாற்றங்கள், மனக்கசப்புக்கள் ஏற்படலாம். இந்த
புனிதமான உறவு திருமணத்தின் பின்பு ஏற்புடையது.
அடுத்து வருவது திருமணம்
எனும் அருட் சாதனம் இது
ஆழ்ந்த அன்புறவின் அதி உச்ச கட்டம் எனக்கருதலாம். அதாவது இதுவரை காதலன் காதலியாக பழகிவந்த ஆண் பெண் இருவரும், தாங்கள் ஒருகுடும்பமாக வாழ விருப்பம் தெரிவித்து திருச்சபையின் சட்டதிட்டங்களின் படி வாழ திருச்சபையிடம் அனுமதி பெற்று திருமணம் என்னும் அருட்சாதனத்தை பெறத்தயராகின்றார்கள். இருமனங்களும் ஒருமனமாகும் திருமணம் நடைபெறுகின்றது. திருமணத் திருப்பலியையும் இவ் அருட்சாதனத்தையும் நிறைவேற்றி
வைப்பவர் இறைவன் ஒருவரே, இங்கு குருவானவர்
இறைவனின் கருவியாக செயற்படுகிறார். அதனால் தான் இயேசு திருமணம் பற்றி பேசிய போது " கடவுள் இணைத்ததை மனிதன் பிரிக்காதிருக்கட்டும்"
மத்தேயு. 19:6 என்று சொன்னார். இதனையே
திருச்சபையின் சட்ட நூலும் எடுத்து இயம்புகின்றது. திருமண
உடன்படிக்கையால்
ஓர்
ஆணும்
ஒரு
பெண்ணும்
தங்கள்
வாழ்வு
முழுவதற்குமான
ஓர்
உறவுசமூகத்தைத்
தங்களிடையே
ஏற்படுத்துகின்றனர்,
இவ்வுடன்படிக்கை,
தன்
இயல்பிலே
மணமக்களின்
நலனுக்காகவும்
மகப்பேறு
மற்றும்
குழந்தை
வளர்ப்புக்காகவும்
அமைந்துள்ளது,
இது
திருமுழுக்குப்
பெற்றறவர்களிடையே
ஓர்
அருளடையாள
மாண்பிற்கு
ஆண்டவராகிய
கிறிஸ்துவால்
உயர்த்தப்பட்டுள்ளது.
(திருச்சபை
சட்ட
எண்: 1055).
அப்படியானால் இன்று பல திருமண ஒப்பந்தங்கள்
முறிவடைகின்றன. திருமணமாகி சிறிது காலத்துக்குள் விவாகரத்து கேட்டு பல குடும்பங்கள் நீதி
மன்றம் செல்கின்றன. பல இளம் குடும்பங்களுக்குள்ளே
பிரச்சினைகள். இவையெல்லாம் எதனால் நிகழ்கின்றன? என நீங்கள்
என்னிடம் கேட்பது புரிகின்றது. நான்
ஏற்கனவே கூறியது போல இன்று பலர் ஆழமான அன்புநிறைந்த
உறவுடன் வாழும் மனப்பக்குவத்தை பெறுவதற்கு முன்னமே திருமணம்
செய்து விடுகின்றார்கள். ஆழமான அன்பு கொண்ட உறவிற்கு நீடிய கால அவகாசம் அவசியமாகின்றது. இதையே
எனது வரிபடத்தின் மூலம் உங்களுக்கு விளக்கியுள்ளேன். ஆனால் இன்று நடை பெறும் சில திருமணங்கள் அவசரத்திருமணங்கள் ஆக இருக்கிறது. ஸ்கைப்பில்
(Skype) ஒரு
வாரம் கதைத்து விட்டு திருமணம் நிச்சயிக்கப்படுகின்றது. மணமக்களின் குணங்களை அறிவதை விட அவர்களிடம்
எவ்வளவு பணம் இருக்கின்றது என்று பார்த்து செய்யப்படும் திருமணங்களை நம் கண்கூடாக காண்கின்றோம். அன்பை விட அழகு
என்பது திருமணத்தின் பேசு பொருளாகி விட்டது. குணமான பொடியன், குணமான பிள்ளை என்று கூறுகின்ற வழக்கம் மறைந்து வடிவான பொடியன், வடிவான பிள்ளை என்று கூறுகின்ற சமுதாயத்திலே வாழ்கின்றோம். ஆகவே இப்படியான சூழ்நிலையிலே திருமணம் செய்யும் மணமக்கள் ஆழ்ந்த அன்புறவு கொண்டிருப்பார்கள் என்பது சந்தேகமே. அடுத்து திருமணம்
செய்து கொண்ட தம்பதிகளுக்கிடையில் தியாகத்துடன் கூடிய அன்பு அவசியமாகத் தேவை. ஆனால் இன்று நாம் மற்றவர்களுக்காக தியாகம் செய்ய அஞ்சுகிறோம் . பொருட்களை நேசித்து மனிதனை பயன்படுத்தும் பொருளாதார கொள்கை கொண்ட உலகில், திரைப்படத்திற்கு ஒன்றாக செல்வதும், குளிரூட்டப்பட்ட உணவகங்களில்
உணவு அருந்துவதும் தான் அன்புறவு
என்ற ஒரு மாயைக்குள்ளே பல குடும்பங்கள் வாழ்கின்றார்கள்.
இவை கிடைக்காத போது உறவு நிலையிலே சிக்கல் ஏற்படுகின்றது. இன்றைய தொழில் நுட்பமும் எமது உறவை பிரிப்பதற்கு ஒரு காரணம் எனலாம். கணவன் மனைவியாக இருந்து உறவு கொள்ள நமக்கு நேரம் இல்லை, ஏனென்றால் முகப்புத்தகத்திலும், வாட்ஸ் அப் இலும் நமக்கு நிறைய நண்பர்கள். ஆகவே கணவன் மனைவியாக உறவு கொண்டு வாழ வேண்டும் என்பதை பலர் மறந்துவிட்டார்கள். இப்படியாக அடுக்கிக்கொண்டே போகலாம்.
என் அன்பிற்கினிய நண்பர்களே! இல்லற
வாழ்வு இனிமையாக வேண்டுமா? அவசரத் திருமணங்களை இயன்றவரை தவிருங்கள். உங்கள் உறவின் தன்மை எப்படி இருக்கின்றது என்பதை ஆராயுங்கள். ஆழமான அன்புநிறைந்த
உறவுடன் வாழும் மனப்பக்குவத்தை பெறுவதற்கு முன் திருமணம் செய்வதை இயன்றவரை தவிருங்கள். தன்னலமற்ற தியாகத்துடன் கூடிய உறவினை வளர்த்துக்கொள்ளுங்கள். உங்கள் இன்ப துன்பங்களை ஒருவருக்கொருவர் பகிர்ந்து வாழப் பழகிக்கொள்ளுங்கள். ஒருபோதும் நம்பிக்கைத்துரோகம் செய்யாதீர்கள். உங்கள் உறவு உடலைத் தவிர்த்து உள்ளத்தின் ஆழத்தில் இருந்து எழுகின்ற அன்பின் உறவாக அமையட்டும். திரு விவிலியம் உங்கள் வாழ்வின் வேத நூலாக அமையட்டும். குடும்ப செபம் உங்கள் அன்றாட உரையாடல் ஆகட்டும். கிறிஸ்து உங்கள் முன்மாதிரிகையானவராக
இருக்கட்டும். இனி பாருங்கள் இல்லறம் இனிக்கும், இறைஆசீர் கிடைக்கும். இனிய உறவு மலரும். இறைவன் இணைத்ததை மனிதன் பிரிக்காதிருக்கட்டும்
எழுத்துருவாக்கம்: சகோ. அ. அன்ரன் ஞானராஜ்
றெவல் SDB


Comments
Post a Comment