இறந்த ஆன்மாக்களின் நினைவு நாள்

மறையுரைச் சிந்தனை (நவம்பர் 02)
இறந்த ஆன்மாக்களின் நினைவு நாள்
ஓர் ஊரில் தந்தையும் மகளும் வாழ்ந்து வந்தார்கள். தந்தை தன்னுடைய மகளை அதிகமாக அன்பு செய்துவந்தார். அவளை தன்னுடைய உயிராக நினைத்து வாழ்ந்து வந்தார்.
ஒருநாள் அன்பு மகள் நோய்வாய்ப்பட்டு படுத்தபடுக்கையானாள். அப்போது அந்த தந்தை நகரில் இருந்த எல்லா மருத்துவர்களிடமும் சென்று சிகிச்சை அளித்துப் பார்த்தார். ஆனால் யாராலும் அவளைக் குணப்படுத்த முடியவில்லை. ஒருநாள் இரவில் மகள் இறந்துபோனாள். அப்போது அந்த தந்தை அடைந்த துக்கத்திற்கு அளவே இல்லை. தன்னுடைய உலகமே இருண்டுபோய்விட்டது என நினைத்தார். எல்லாரிடமிருந்து தன்னைத் தனிமைப் படுத்திக்கொண்டு தனிமையான வாழ்வு வந்தார். தன்னுடைய மகளின் ஞாபகம் வரும்போதெல்லாம் கண்ணீர் விட்டு அழுதார்.
ஒருநாள் அவர் தூங்கும்போது கனவு ஒன்று கண்டார். அந்தக் கனவில் அவர் மேலுலகத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டார். அங்கே வெண்ணிற ஆடை அணிந்த குழந்தைகள் தங்களுடைய கைகளில் எரியும் மெழுகுதிரியை ஏந்தி கடவுளின் திருமுன் வரிசையாக நின்றுகொண்டிருந்தார்கள். ஒரே ஒரு குழந்தை மட்டும் அணைந்த மெழுகுதிரியோடு நின்றுகொண்டிருந்தது. அருகே சென்று பார்த்தபோதுதான் தெரிந்தது அது தன்னுடைய குழந்தை என்று.
உடனே அவர் அந்தக் குழந்தையை (மகளை) அள்ளி எடுத்துக்கொண்டு, “மகளே எல்லாருடைய திரியும் எரிந்துகொண்டிருக்க, உன்னுடைய திரி மட்டும் ஏன் அணைந்துபோய் இருக்கின்றது?” என்று காரணத்தைக் கேட்டார். அதற்கு அந்த குழந்தை, “அப்பா! என்னுடைய திரி மற்ற குழந்தைகளின் திரிகளைப் போன்று நன்றாகத்தான் எரியும். ஆனால் நீ தொடர்ந்து வடிக்கும் கண்ணீர் பட்டுதான் என்னுடைய திரி அணைந்துபோய்விடுகிறது?” என்றது.
தொடர்ந்து அந்தக் குழந்தை தன்னுடைய தந்தையைப் பார்த்துச் சொன்னது, “அப்பா எதற்காக இப்படி அழுதுகொண்டே இருக்கிறாய். நான் உன்னைவிட்டுப் பிரிந்தாலும், இங்கே உயிரோடுதானே இருக்கிறேன். அதனால் என்னைப்பற்றி நினைத்து நீ இனிமேலும் அழுதுகொண்டிருக்காதே” என்று. உடனே அந்த தந்தை தூக்கத்திலிருந்து விழித்தெழுந்தார். தன்னுடைய மகள் விண்ணகத்தில் உயிரோடுதான் என்று ஆறுதல் அடைந்தார்.
“வாழ்வு மாறுபடுகிறதே அன்றி, அழிந்து போவதில்லை” என்பதற்கு இந்த நிகழ்வு எவ்வளவு பொருத்தமாக இருக்கின்றது.
இன்று அன்னையாம் திரு அவை இறந்த அனைத்து ஆன்மாக்களின் நினைவுநாளைக் கொண்டாடி மகிழ்கின்றது. இந்த நல்ல நாளில் நம்முடைய குடும்பங்களில் இறந்த அன்பான உறவுகளுக்காக, இன்னும் யாரும் நினையாத ஆன்மாக்களுக்காக சிறப்பாக ஜெபிக்க அழைக்கப்படுகின்றோம்.
இன்று நாம் கொண்டாடும் இறந்த அனைத்து ஆன்மாக்களின் நினைவு நாள் தொடக்கத்தில் ‘குளூனி’ நகரில் பிறந்த ஓடிலோ என்ற துறவியால் கி.பி.906 ஆம் ஆண்டு கொண்டாடப்பட்டது. அதன்பின் இவ்விழா படிப்படியாக எல்லா துறவுமடங்களுக்கும் பரவி, இறந்த ஆன்மாக்களுக்காக விழா எடுத்துக் கொண்டாடும் நிலை உருவானது. பதினான்காம் நூற்றாண்டிலிருந்து இவ்விழா நவம்பர் 2 ஆம் தேதி கொண்டாடும் நிலை உருவானது. விவிலியத்தில் கூட இறந்த ஆன்மாக்களுக்காக பலிகொடுக்கும் நிலை இருந்ததை நாம் வாசிக்கின்றோம் (2 12: 43-45).
இப்போது இவ்விழா நமக்கு உணர்த்து செய்தி என்ன என்று சிந்தித்துப் பார்த்து நிறைவு செய்வோம்.
முதலாவதாக இவ்விழா உணர்த்தும் செய்தி, நாமும் ஒருநாள் உயிர்த்தெழுவோம் என்ற நம்பிக்கையைத் தருவதாக இருக்கின்றது. உரோமையருக்கு எழுதப்பட்ட திருமுகத்திலிருந்து எடுக்கப்பட்ட இன்றைய இரண்டாம் வாசகத்தில் பவுலடியார் கூறுவார், “கிறிஸ்துவோடு நாம் இறந்தோமாயின், அவரோடு வாழ்வோம் என்பதே நாம் கொண்டுள்ள நம்பிக்கை” என்று. ஆகவே நம்முடைய மண்ணுலக வாழ்க்கை சாவோடு முடிந்துபோகின்ற ஒன்று அல்ல, மாறாக நாம் இறந்தபின்னும் உயிர்வாழ்வோம் என்பதே ஆகும். அத்தகைய நம்பிக்கை நிறைந்த வாழ்க்கை வாழ்வதுதான் உண்மையான கிறிஸ்தவ வாழ்க்கையாகும்.
இரண்டாவதாக இவ்விழா இறந்த ஆன்மாகளுக்காக, குறிப்பாக உத்தரிக்க தலத்தில் உள்ள ஆன்மாக்களுக்காக ஜெபிக்க அழைப்புத் தருகின்றது. “புனிதர்களின் சமூக உறவை விசுவாசிக்கிறோம்” என்று சொல்லும் நாம் துன்புறும் திருச்சபையில் உள்ள (உத்தரிக்க தலத்தில் உள்ளவர்கள்) ஆன்மாக்களுக்காக ஜெபிக்க அழைக்கப்படுகின்றோம். அவர்களுக்கான நம்முடைய ஜெபம், அவர்களுடைய தண்டனையைக் குறைத்து அவர்களை வெற்றிபெற்ற திருச்சபையில் (விண்ணகம்) சேர்த்துக்கொள்ளும். எனவே நாம் அவர்களுக்காக ஜெபிப்போம்.
மூன்றாக இவ்விழா உணர்த்தும் செய்தி, நாம் இறைவன் தரும் மகிமையை, விண்ணகத்தைப் பெறவேண்டும் என்றால், நம்மோடு வாழக்கூடிய சின்னஞ் சிறிய சகோதரிகளுக்கு நம்மாலான உத்திகளைச் செய்யவேண்டும். இன்றைய நற்செய்தி வாசகத்தில் ஆண்டவர் இயேசு சின்னஞ் சிறிய சகோதர சகோதரிகளுக்கு உதவி செய்தவர்களுக்குத்தான் விண்ணகத்தை பரிசாகத் தருகின்றார்.
எனவே, இந்த நல்ல நாளில் இறந்த ஆன்மாக்களுக்காக சிறப்பாக ஜெபிப்போம். அதோடு நாமும் இறைவனுக்கு உகந்த நல்ல வழியில் நடப்போம். அதன்வழியாக இறையருள் நிறைவாய் பெறுவோம்.
“If Job’s sons were purified by their father’s sacrifice, why should we doubt that our offerings for the dead bring them some consolation? Let us not hesitate to help those who have died and to offer our prayers for them” – ஜான் கிரிஸ்சோஸ்டம்


Comments

Popular posts from this blog

நீயும் நானும் (ஆழமான அன்புறவினைத்தேடி ......)

திருவருகைக் கால வளையம் - Advent wreath

✠ புனிதர் ஃபிரான்சிஸ் சவேரியார் ✠ (St. Francis Xavier)