திருவருகைக் கால வளையம் - Advent wreath

திருவருகைக் கால வளையம் - Advent wreath





(விக்கிபீடியா (Wikipedia) வழியாக அறிந்துகொண்ட தரவுகளது அடிப்படையில் எழுதப்பட்டது)


திருவருகைக் காலம் நமதாண்டவர் இயேசுவின் முதல் வருகையினை எமக்கு நினைவுபடுத்தி உலக முடிவில் அவரது இரண்டாவது வருகையினை எதிர்பார்க்கும் காலமென அன்னையாம் திருச்சபை எமக்குப் படிப்பிக்கின்றது. ஆனந்தமும், மகிழ்ச்சியும் நிறைந்த எண்ணக்கருக்களை எமதுள்ளங்களில் விதைக்கும் காலமென்றும் நாம் கருதலாம். எதிர்பார்ப்பு, தயாரிப்பு, வரவேற்பு என்று பல கோணங்களில் திருவருகைக்காலம் எம்மை சிந்தித்துத் தியானிக்க அழைக்கின்றது
மேற்குலக நாடுகளில் வாழும் கத்தோலிக்க விசுவாசிகள் திருவருகைக் காலத்தில் குறிப்பாக ஆலயங்களில் வட்ட வடிவமான திருவருகைக் கால வளையம் (Advent wreath) எனப்படும் ஒரு அமைப்பிலே நான்கு மெழுகுதிரிகளை திருவருகைக் காலத்தின் ஒவ்வொரு ஞாயிறும் ஒவ்வொரு திரியாக ஞாயிறு திருப்பலி வழிபாட்டு வேளைகளில் ஏற்றி வைப்பதுண்டு.
மெழுகு திரிகள் ஏற்றப்படுதல் வெளி அடையாளமாக இருப்பினும், அவை மனித இதயங்களில் இறை நம்பிக்கையை ஆழப்படுத்தி, குடும்பங்களில் கிறிஸ்து பிறப்புப் பெருவிழாவின் உண்மைத் தன்மையை இழந்துவிடாதிருக்கவும் உதவுகின்றன என்பது பலரது கருத்தாகும். தற்போது தாயகத்திலும் ஒருசில ஆலயங்களில் இந்நிகழ்வு இடம்பெறுவதாக அறிகிறேன்.
ஆன்மீகச் செழுமை நிறைந்த கருத்தோடு இவ்வளையத்தில் மெழுகுதிரிகள் ஏற்றப்பட்டாலும், புலம்பெயர் தமிழர்களான நாம் மேற்குலக பாரம்பரியத்தின் உண்மைத் தன்மையைச் சரியாகப் புரிந்து கொள்ளாது செயற்படுவதுண்டு. எனவே விக்கிபீடியா (Wikipedia) வழியாக நான் அறிந்து கொண்டவற்றை எனது முகநூல் உறவுகளோடு பகிர்ந்துகொள்ள விரும்புகின்றேன்.
பசுமை நிறைந்த இலைகளினால் தயாரிக்கப்படும் திருவருகைக்கால வளையம் (Advent wreath) மனித வாழ்வின் தொடர்ச்சியையும், அதன் வளமையையும் குறித்து நிற்கின்றது. குறிப்பாக இவ்வளையம் உருவாக்கப் பயன்படும் பொருட்கள் ஒவ்வொன்றும் சிறப்பான கருத்துக்களை உள்ளடக்கியுள்ளன.
இந்த வளையம் ஒரு வெற்றிச்சின்னம். துன்பத்தின் மீதும், துன்புறுத்தலின் மீதும் வெற்றி கொள்வதைக் குறிக்கின்ற கரும்பச்சை நிற ஊசியிலைகள், மரப்பட்டை என்பன அழியாமை யையும் - என்றும் உதிராமல் இருக்கும் மரத்தின் இலைகள் பலத்தையும், குணமளித்தலையும் குறிப்பிடுகின்றன. இவை முடிவில்லாக் கடவுளின் பிரசன்னத்தையும், ஆன்மாவின் அழியாமை யையும், கிறிஸ்துவிடம் முடிவில்லா வாழ்வைக் கண்டு கொள்ள முடியும் என்பதனையும், வாழ்வையும், உயிர்த்தெழுதலையும் குறித்து நிற்கின்றன.
திருவருகைக் காலத்தின் நான்கு ஞாயிறு வாரத்தையும் குறிப்பிடும் நான்கு மெழுகுதிரிகளுள், ஊதா நிறத்தில் மூன்றும், இன்னொன்று மெல்லிய சிவப்பு அல்லது றோஸ் நிறமுடையதாகவும் இருக்கின்றது. இம்மெழுகுதிரிகள் செபம், தியாகம், தூய்மை, ஆயத்தம் என்பனவற்றை நம்பிக்கை, அன்பு, அமைதி, மகிழ்ச்சி என இணைத்து வெளிப்படுத்துகின்றது.
றோஸ் நிற மெழுகுதிரி திருவருகைக்கால மூன்றாவது ஞாயிறில் ஏற்றி வைக்கப்பட்டு பேருவகை, அல்லது பெருமகிழ்ச்சியின் அடையாளமாக கிறிஸ்துவின் வருகை மிக அருகில் வந்துவிட்டது என்பதனை நினைவுபடுத்துகிறது. நடுவில் உள்ள வெள்ளை மெழுகுதிரி கிறிஸ்துவே உலகின் ஒளி என்பதைப் பிரசன்னப்படுத்தி நிற்கின்றது.
கத்தோலிக்க விசுவாசிகளது குடும்பங்களிலூம் திருவருகைக் காலத்தில் பெரும்பாலும் இரவு உணவின்போது இம் மெழுகுதிரிகள் ஏற்றப்படுவதுண்டு. திருவருகைக்கால முதல் ஞாயிறு குடும்பத்தலைவர் இரவுணவை ஆசீர்வதித்தபின், திருவருகைக்கால அலங்கார வளைய செபத்தைச் சொன்ன பின்னர் குடும்பத்தின் இளைய குழந்தையால் ஊதா நிற மெழுகுதிரி ஏற்றிவைக்கப்படும்.
திருவருகைக் கால இரண்டாம் ஞாயிறு குடும்பத்தின் தலைவர் இரவுணவை ஆசீர்வதித்து செபித்தபின், திருவருகைக்கால அலங்கார வளைய இரண்டாவது வார செபத்தைச் சொல்லி ஆசீர்வதிப்பார். தொடர்ந்து குடும்பத்தின் மூத்த குழந்தையால் இரண்டாவது ஊதா நிற மெழுகுதிரியை முதல்வார மெழுகுதிரியின் ஒளியிலிருந்து ஒளியைப் பெற்று ஏற்றிவைக்கப்படும்.
அவ்வாறே திருவருகைக்கால மூன்றாம் ஞாயிறில், குடும்பத்தின் தலைவர் இரவுணவை ஆசீர்வதித்து செபித்த பின்னர் திருவருகைக்கால அலங்கார வளைய செபத்தைச் சொல்லி ஆசீர்வதிப்பார். பின்னர் குடும்பத்தின் தாயால் மூன்றாவது றோஸ் நிற மெழுகுதிரியையும், முதல்வார மற்றும் இரண்டாம் வார மெழுகு திரிகளையும் ஏற்றிவைக்கப்படும்.
இறுதியாக திருவருகைக் கால நான்காம் ஞாயிறு குடும்பத்தின் தலைவர் உணவை ஆசீர்வதித்து செபித்தபின் திருவருகைக்கால அலங்கார வளையத்தை ஆசீர்வதிப்பார். இதனைத் தொடர்ந்து குடும்பத்தின் தந்தையால் நான்காவது ஊதா நிற மெழுகுதிரியையும், ஏனைய மூன்று திரிகளையும் ஏற்றிவைக்கப்படும்.
நம்பிக்கை, அன்பு, அமைதி, மகிழ்ச்சி எனப்படும் எதிர்பார்ப்புக்களுடன் திருவருகைக்கால ஞாயிறு வாரங்கள் கத்தோலிக்க திருச்சபை வழிபாட்டில் ஒரு புதிய ஆண்டாக ஆரம்பிக்கப் படுவதால், கத்தோலிக்க விசுவாசிகளாகிய எமக்கு ஒவ்வொரு புதிய ஆண்டும் இறைமகன் கிறிஸ்து இயேசுவின் மறுவருகையை ஆவலோடு எதிர்பார்க்கும் ஒரு புதிய வழிபாட்டு ஆண்டாக ஆரம்பிக்க உதவுகிறது என்பது எனது பனிவான அபிப்பிராயமாகும்.


Comments

Popular posts from this blog

நீயும் நானும் (ஆழமான அன்புறவினைத்தேடி ......)

✠ புனிதர் ஃபிரான்சிஸ் சவேரியார் ✠ (St. Francis Xavier)