† அருட்பணியாளரின் ஞாயிறு இரவு செபம் †
(கத்தோலிக்க அருட்பணியாளர், இறையியலார் மற்றும் எழுத்தாளர் 'மிஷல்
க்வா' (Rev. Father
Michel Quoist) எழுதிய "The Priest: A Prayer on a Sunday Night" என்பதன்
தமிழாக்கம்) :
இன்றிரவு, ஆண்டவரே,
நான் தனிமையாக இருக்கிறேன்.
கொஞ்சம் கொஞ்சமாக ஆலயத்தின் அரவங்கள் அடங்கிவிட்டன,
கூடி வந்த மக்கள் ஓடி மறைந்துவிட்டனர்.
நான் இப்போதுதான் என் இல்லம் வந்தேன்.
தனியாக.
தனிமையாக.
வரும் வழியில் சிலர் தங்கள் மாலை நடைப்பயிற்சி முடிந்து
திரும்பினார்கள்.
நான் கடந்து வந்த தியேட்டர் தன் வாயிலிருந்து மக்களை வெளியே
கக்கிக்கொண்டிருந்தது.
கஃபே இல்லங்களை ஒட்டிய சாலையில்,
களைப்பான பாதங்கள் மெதுவாக நகர்ந்து ஞாயிறு விடுமுறையின்
மகிழ்ச்சியை
நீட்ட முனைந்து கொண்டிருந்தன.
நடைபாதையில் கால்பந்து விளையாடிக்கொண்டிருந்த
சில இளவல்கள்மேல் இடித்து நின்றேன்.
உற்றுப்பார்த்தேன்.
ஆம், என்னை வந்து சேராத மற்றவர்களின் இளவல்கள் அவர்கள்.
இதோ, ஆண்டவரே,
நான் தனியாக இருக்கிறேன்.
மௌனம் என்னைக் கொல்கிறது.
தனிமை என்னை நெருக்குகிறது.
ஆண்டவரே, எனக்கு வயது 35,
மற்றவர்களைப் போலவே எனக்கும் ஒரு உடல்,
வேலை செய்யத் தயாராய் இருக்கும் உடல்,
காதல் செய்யப் படைக்கப்பட்ட இதயம்,
ஆனால் நான் எல்லாவற்றையும் உமக்குக் கொடுத்துவிட்டேன்.
ஆம், நீர், 'வேண்டும்,' என்றீர்.
நானும் உம்மிடம் கொடுத்துவிட்டேன்.
ஆனால், எனக்கு ரொம்ப வலிக்கிறது.
ஒருவரின் உடலைக் கொடுப்பது கடினம்.
ஏனென்றால், அது தன்னை மற்றவருக்கு கொடுப்பதையே விரும்புகிறது.
ஆம் கடினம்!
எல்லாரையும் அன்பு செய்தாலும், யாரையும்
சொந்தமாக்கிக்கொள்ளாமல் இருப்பது!
ஆம் கடினம்!
எல்லாரோடும் கைகுலுக்கினாலும், யார்
கையையும் பற்றிக்கொள்ளாமல் இருப்பது!
ஆம் கடினம்!
உம்மை மட்டுமே என்றும் அன்பு செய்துகொண்டிருப்பது!
ஆம் கடினம்!
எனக்கென்று எதுவுமாக இல்லாமல், எல்லாருக்கும்
எல்லாமாய் இருப்பது!
ஆம் கடினம்!
மற்றவர்களைப் போல, மற்றவர்களோடு, மற்றவர்களுக்காகவே இருப்பது!
ஆம் கடினம்!
ஒருபோதும் எதையும் பெறாமால், எந்நேரமும் கொடுத்துக்கொண்டே இருப்பது!
ஆம் கடினம்!
என்னை யாரும் தேடவில்லையென்றாலும், அடுத்தவர்களை
மட்டுமே நான் தேடுவது!
ஆம் கடினம்!
மற்றவர்களின் பாவங்களைக் கேட்டாலும், அந்தப்
பாவத்தில் விழாமல் நான் இருப்பது!
ஆம் கடினம்!
மற்றவர்களின் இரகசியங்களை என்னுள் சேர்த்துக்கொண்டே வருவது!
ஆம் கடினம்!
ஒரு நொடியும் நான் சுமக்கப்படவில்லையென்றாலும், எந்நேரமும்
மற்றவர்களை என் தோளில் சுமப்பது!
ஆம் கடினம்!
மென்மையானதைப் பாதுகாக்கவும், வன்மையானதின் மேல் சாயாமல் இருப்பது!
ஆம் கடினம்!
தனிமையில் இருப்பது.
எல்லாருக்கும் முன் தனிமையாக!
உலகின் முன் தனிமையாக!
துன்பத்தின் முன்,
இறப்பின் முன்,
பாவத்தின் முன்
தனிமையாக இருப்பது!
மகனே,
நீ தனியாய் இல்லை.
நான் உன்னுடன் இருக்கிறேன்.
நான்தான் நீ!
என் மனுவுருவாக்கத்தின், மீட்பின் மனித நீட்சியே நீ!
உலகின் தொடக்கத்திலேயே
நான் உன்னைத் தெரிந்து கொண்டேன்.
பிறரை ஆசிர்வதிக்க எனக்குத் தேவை உன் கரங்கள்!
பிறரிடம் பேச எனக்குத் தேவை உன் உதடுகள்!
பிறருக்காக துன்புற எனக்குத் தேவை உன் உடல்!
பிறரை அன்பு செய்ய எனக்குத் தேவை உன் இதயம்!
தொடர்ந்து நான் மீட்பு பணி செய்ய தேவை நீ!
என்னோடு இரு, என் மகனே!
இதோ இருக்கிறேன், ஆண்டவரே!
இதோ என் உடல்!
இதோ என் இதயம்!
இதோ என் ஆன்மா!
எல்லாரையும் அணைத்துக்கொள்ள என் இதயத்தைப் பெரிதாக்கும்!
எல்லாரையும் சுமக்க என்னை உறுதியாக்கும்!
யாரையும் பற்றிக்கொள்ளாவண்ணம் என்னைத் தூய்மையாக்கும்!
என்னை எல்லாரும் சந்தித்துக்கொள்ளும் தற்காலிக நாற்சந்தியாக்கும்!
என்னில் முடிந்துவிடாத சாலை எல்லாரையும் உம்மிடம் சேர்க்கட்டும்!
ஆண்டவரே, இன்றிரவு,
எல்லாம் அமைதியாக இருக்கும் இந்தப் பொழுதில்,
தனிமையின் கொடுக்கு என்னைத் தீண்டும் இந்தப் பொழுதில்,
என்னால் பசிதீர்க்க முடியாத என் மனித சகஉயிர்கள்
என் ஆன்மாவை ஆரத்தழுவும் இந்தப் பொழுதில்,
இந்த உலகின் சுமை என் தோள்களை அழுத்தும் இந்தப் பொழுதில்,
அன்று நான் சொன்ன 'ஆம்!' என்ற வார்த்தையை,
இன்றும் சொல்கிறேன்!
உம்மிடம்! தனியாக! உம்முன்!
இந்த மாலையின் மயக்கும் மௌனத்தில்!
நன்றி :
( அருட்தந்தை யேசு கருணாநிதி )


Comments
Post a Comment