விண்ணேற்றப் பெருவிழா (Year 2)

விண்ணேற்றப் பெருவிழா (Year 2)

(திப 1:1-11 ; எபே 4: 1-13 ; மாற் 16: 15-20)
விண்ணேறிச் சென்று, தந்தையின் வலப்பக்கம் அமர்ந்த இயேசு!
ஒரு சமயம் பிரபல மறைபோதகரான பில்லி கிரகாம் (Billy Graham) ஒரு நகருக்கு போதிக்கச் சென்றார். அவ்வாறு அவர் போதிக்கச் சென்றபோது உடனடியாக அனுப்பவேண்டிய ஒரு கடிதத்தை அனுப்புவதற்காக அந்நகரில் இருந்த அஞ்சல் நிலையத்தை நீண்ட நேரமாகத் தேடினார். எவ்வளவுதான் அவர் கடுமையாகத் தேடினாலும் அவரால் அஞ்சல் நிலையம் எங்கிருக்கின்றது என்று கண்டுபிடிக்க முடியவில்லை.
அப்போது அந்த வழியாக ஓர் இளைஞன் வந்தான். அவனை நிறுத்திய பில்லி கிரகாம், “இந்த நகரில் அஞ்சல் நிலையம் எங்கிருக்கின்றது?” என்று கேட்டார். அவனும் அஞ்சல் நிலையம் எங்கிருக்கின்றது என்று மிகத் தெளிவாக சுட்டிக்கட்டினான். அவன் அஞ்சல் நிலையம் எங்கிருக்கின்றது என்று சரியாகச் சுட்டிக்காட்டியதைக் கண்டு மகிழ்ந்துபோன அவர், அவனிடம், “தம்பி! நான் பாப்டிஸ்ட் திருச்சபையைச் சார்ந்த ஒரு மறைபோதகர். இன்று மாலை இங்கிருக்கும் ஆலயத்தில் மக்களுக்கு எப்படி விண்ணகம் செல்லலாம் என்பதற்கான வழியைச் சுட்டிக்காட்டப் போகின்றேன். நீயும் வரலாம்” என்றார்.
அதைக் கேட்ட இளைஞன், “நிச்சயம் உங்களால் விண்ணகம் செல்வதற்கான வழியை மக்களுக்கு சுட்டிக்காட்ட முடியாது” என்றான். “ஏன் அவ்வாறு சொல்கிறாய்?” என்று பில்லி கிரகாம் கேட்க, “உங்களுக்கு அஞ்சல் நிலையம் எப்படிச் செல்லவேண்டும் என்றே தெரியவில்லை, நீங்கள் எல்லாம் எப்படி மக்கள் விண்ணகம் செல்வதற்கான வழியைச் சொல்ல முடியும்?” என்றான். இதைக் கேட்ட பில்லி கிரகாமால் பதில் சொல்ல முடியவில்லை.
பில்லி கிரகாமிற்கு வேண்டுமானால் விண்ணகம் செல்வதற்கான வழி தெரியாமல் இருக்கலாம், ஆனால், ஆண்டவர் இயேசுவுக்கு விண்ணகம் செல்கின்ற வழி தெரியும். ஏனென்றால், அவர்தான் முதன்முதலாக விண்ணகம் ஏறிச் சென்று, தந்தையின் வலப்பக்கம் அமர்ந்து நமக்காகப் பரிந்து பேசுகின்றார். ஆம், இன்று நாம் நம் ஆண்டவர் இயேசு கிறிஸ்து விண்ணகம் சென்ற விழாவை – விண்ணேற்றப் பெருவிழாவைக் - கொண்டாடி மகிழ்கின்றோம். இந்நாளில் ஆண்டவர் இயேசுவின் விண்ணேற்றப் பெருவிழா நமக்குக் கூறுகின்ற செய்தியை ஆழமாக சிந்தித்துப் பார்ப்போம்.
ஆண்டவர் இயேசு இறந்து, மூன்றாம் நாள் உயிர்த்தெழுந்த பின்பு உடனடியாக விண்ணகம் செல்லவில்லை. அவர் நாற்பது நாட்கள் தன்னுடைய சீடர்களோடு இருந்து அவர்களைத் தேற்றுக்கின்றார், மறு பயிற்சி அளித்து, அவர்களை இன்னும் வலுவுள்ளவர்களாக மாற்றுகின்றார். அதன்பின்னே அவர் விண்ணேற்றம் அடைகின்றார். இயேசு விண்ணகம் சென்றதால் நமக்கு ஏதாவது இழப்பு ஏற்படுமோ என்றுகூட நாம் நினைக்கலாம். இயேசுவின் விண்ணேற்றத்தினால் நமக்கு இழப்பு இல்லை, மாறாக அதனால் நாம் நிறைய பலன்களைப் பெறலாம் என்றுதான் சொல்லவேண்டும்.
இயேசுவின் விண்ணேற்றத்தினால் நாம் அடையும் நன்மைகள் என்னென்ன வென்று இப்போது பார்ப்போம். இயேசுவின் விண்ணேற்றத்தினால் நாம் அடையக்கூடிய முதலாவது நன்மை தூய ஆவியின் வருகை ஆகும். ஆம், இயேசுவின் விண்ணேற்றத்திற்குப் பிறகுதான் தூய ஆவியின் வருகையானது நிகழ்கின்றது.. யோவான் நற்செய்தியில் ஆண்டவர் இயேசு மிகத் தெளிவாக எடுத்துரைப்பார், “நான் போகாவிட்டால் துணையாளர் உங்களிடம் வரமாட்டார், நான் போனால் அவரை உங்களிடம் அனுப்புவேன்” என்று (யோவா 16:7). ஆகையால், இயேசுவின் விண்ணேற்றத்தினால் தூய ஆவியைக் கொடையாகப் பெற்றுக்கொள்ளலாம் என நாம் மிக உறுதியாக நம்பலாம்.
இயேசுவின் விண்ணேற்றத்தினால் நாம் அடையும் இரண்டாவது நன்மை இயேசுவின் பரிந்து பேசுதலாகும். ஆம், விண்ணேற்றம் அடைந்த இயேசு தந்தையின் வலப்பக்கம் அமர்ந்து, அங்கே அவர் தந்தையிடம் நமக்காகப் பரிந்துபேசுகின்றார் என்று விவிலியம் நமக்கு சான்று பகர்கின்றது (எபி 7: 25). இயேசு தந்தைக் கடவுளிடம் பரிந்து பேசுகின்றபோது நமக்கு அருளுக்கு மேல் அருள் கிடைக்கும் என்பதுதான் உண்மை.
இயேசுவின் விண்ணேற்றத்தினால் நாம் பெறுகின்ற மூன்றாவது நன்மை இயேசுவின் இரண்டாம் வருகையாகும். திருத்தூதர் பணிகள் நூலிலிருந்து எடுக்கப்பட்ட இன்றைய முதல் வாசகத்தின் இறுதியில், இயேசு விண்ணேற்றம் அடைவதையே பார்த்துக்கொண்டிருந்த சீடர்களிடம் வெண்ணுடை அணிந்த இருவர், “கலிலேயரே, நீங்கள் ஏன் வானத்தை அண்ணார்ந்து பார்த்துக்கொண்டே நிற்கிறீர்கள்? இந்த இயேசு உங்களிடமிருந்து விண்ணேற்றமடைந்ததைக் கண்டீர்களல்லவா? அவ்வாறே அவர் மீண்டும் வருவார் என்கின்றனர். ஆகையால், இயேசுவின் விண்ணேற்றம் அவருடைய இரண்டாம் வருகைக்கான ஓர் அறிவிப்பு என நாம் உறுதியாகச் சொல்லலாம். எனவே, இயேசுவின் விண்ணேற்றம் நமக்கு இழப்பல்ல, அது ஆசிர்வாதம்தான் என நாம் உறுதியாக நம்புவோம்.
இயேசுவின் விண்ணேற்றத்தினால் நாம் என்ன நன்மைகளைப் பெற்றுக்கொள்கின்றோம் என்று சிந்தித்த நாம், ஆண்டவர் இயேசுவின் விண்ணேற்றம் நமக்கு எத்தகைய அழைப்பினைத் தருகின்றது என்று சிந்தித்துப் பார்ப்போம். இன்றைய நற்செய்தியில் ஆண்டவர் இயேசு தன்னுடைய சீடர்களுக்கு விடுக்கின்ற அழைப்பு, “உலகெங்கும் சென்று படைப்பிற்கெல்லாம் நற்செய்தியைப் பறைசாற்றுங்கள்” என்பதாகும். ஆம், நற்செய்தி அறிவிப்புதான் இயேசுவின் சீடர்களுக்கு, இயேசுவைப் பின்பற்றி நடப்பவர்களுக்கு அவர் விடுக்கின்ற முதன்மையான அழைப்பாக இருக்கின்றது. இயேசுவின் சீடர்கள் அவருடைய அழைப்பினை ஏற்று நற்செய்தியை அறிவித்தார்கள், அதற்காக தங்களுடைய இன்னுயிரையும் துறந்தார்கள். இயேசுவின் வழியில் நடக்கும் நாம் நற்செய்தி அறிவிப்பதற்கான முன்னெடுப்புகளை மேற்கொள்கின்றோமா? நற்செய்தி அறிவிப்பின் மீது தாகம் கொண்டு வாழ்கின்றோமா? என்று சிந்தித்துப் பார்த்து அதன்படி வாழ முயற்சிப்பது மிகவும் தேவையான ஒன்றாக இருக்கின்றது.
ஆகவே, இயேசுவின் விண்ணேற்றப் பெருவிழா மகிழ்வில் திளைத்திருக்கும் நாம், விண்ணேற்றப் பெருவிழா தருகின்ற அழைப்பான ‘நற்செய்தியின் தூதுவர்களாக வாழ முயற்சிப்போம். அதன்வழியாக இறையருள் நிறைவாய் பெறுவோம்.

Comments

Popular posts from this blog

நீயும் நானும் (ஆழமான அன்புறவினைத்தேடி ......)

திருவருகைக் கால வளையம் - Advent wreath

✠ புனிதர் ஃபிரான்சிஸ் சவேரியார் ✠ (St. Francis Xavier)