திருவருகைக்கால 02ம் வார ஞாயிறு

திருவருகைக்கால 02ம் வார ஞாயிறு
“பதராக புறம்பே தள்ளப்படுவோமா?“



மத்தேயு 03 : 01 – 12
ஆண்டவராம் இயேசுக்கிறிஸ்து எமது உள்ளமெனும் மாட்டுத் தொழுவமதில் வந்து பிறப்பதற்கு ஆயத்தமாக நாம் என்ன செய்கிறோம்? வாழ்த்துக்கள் அனுப்புவதிலும், எமது வீடுகளை அலங்கரித்து, விருந்துகள் வழங்கு வதற்கும் சிந்திக்கும் நாம், திருவருகைக் காலத்தில் மட்டுமல்ல எக்காலத்திலும் எமது ஆண்மீக வளர்ச்சி தொடர்பாக அக்கறையோடு சிந்திப்பதுண்டா?
நமதாண்டவர் இயேசுவின் வருகைக்காக, இஸ்ராயேல் மக்களைத் தயார் செய்ய வந்த திரு முழுக்கு யோவான், “மனம் மாறுங்கள் ஏனெனில் விண்ணரசு நெருங்கி வந்துவிட்டது“ (மத்தேயு 3:2-3) எனப்பறைசாற்றி, வர விருக்கும் கடவுளின் வருகைக்காக, மக்கள் அனை வரையும் தங்கள் உள்ளங்களைத் தூய்மைப்படுத்த அழைப்பு விடுக்கிறாரென திருவருகைக்கால இரண்டாம் ஞாயிறில் நற்செய்தியாளர் மத்தேயு தெரிவிக்கின்றார்.
நற்செய்தியை ஆழமாக நோக்குமிடத்து, நீதியுள்ள கடவுளின் சினத்திலிருந்து தப்பிக்க நமது மனமாற்றத்தை நற்செயல்கள் மூலம் வெளிப்படுத்துமாறு திருமுழுக்கு யோவான் வலியுறுத்தி “நற்கனி தராத மரங்கள் எல்லாம் வெட்டப்பட்டுத் தீயில் போடப்படும்“ (மத்தேயு 3:10) என்ற எச்சரிக்கை விடுப்பதனால் யோவான் பாலைநிலத்தில் ஒலிக்கின்ற குரலாக, வரவிருக்கின்ற மெசியாவின் வருகையை அறிவித்தார் என்பது எமக்குத் தெரிகின்றது.
யோவானின் அறிவிப்பு, "ஆண்டவருக்காக வழியை ஆயத்தமாக்குங்கள்" (ஏசாயா 40:3) என ஏசாயாவின் செய்தியை எதிரொலித்ததாகவும், பாபிலோனிய அடிமை நிலையிலிருந்து விடுதலை பெறும் புதிய "விடுதலைப் பயணமாக" அமைந்ததாக இறையியலாளர்கள் தெரிவிக்கின்றனர். எனவே, புதிய இஸ்ராயேல் மக்களாக நமதாண்டவர் இயேசுவின் நாமத்தில் திருமுழுக்குப் பெற்றுள்ள நாம் மனமாற்றம் பெறவேண்டும் என்பதே நற்செய்தி எமக்கு வழங்கும் செய்தியாகும்.
திருமுழுக்கு யோவான் தம்மைப்பற்றி அறிவிக்காது, தமக்குப்பின் வரவிருக்கின்றவரைப்பற்றி அறிவித்து “நீங்கள் மனம்மாறியவர்கள் என்பதை அதற்கேற்ற செயல்களால் காட்டுங்கள்“ (மத்தேயு 3:8) என்றபோது, மக்கள் அவரை ஓர் இறைவாக்கினராகப் பார்த்திருப்பர். யோவானின் சொற்களைக் கேட்டு பலர் திருமுழுக்குப் பெற்றனர்.
நமதாண்டவர் இயேசுவும் யோவானின் கையால் யோர்தான் ஆற்றில் திருமுழுக்குப் பெற்றதனால், (மத்தேயு 3:13-17) இயேசுவைவிட யோவான் பெரியவரா? என்னும் கேள்வி எழமுடியும்? எனினும், ''என்னைவிட வலிமைமிக்க ஒருவர் எனக்குப்பின் வருகிறார்'' (மத்தேயு 3:12) எனப்படும் யோவானின் கூற்றினை நாம் அவதானிக்கத் தவறக்கூடாது என்பது எனது பனிவான கருத்தாகும்.
மாற்றம் ஒன்றே மாறாததாயினும், ஒருவர் தான் செல்கிற வழி தவறானது என்று தெரிந்ததும் உடனே சரியான வழிக்குத் திரும்புவது வழக்கம். எனவே, மனமாற்றம் என்பது எல்லாம் வல்ல இறைவனுக்கு அருவருப்பூட்டும் எமது பாவச்செயல்களிலிருந்து விலகி, நல்லதைத் தெரிவு செய்வது என்பதனைக் கற்றறிந்தவர் மட்டுமல்ல, பட்டறிந்த பலரும் கருதுவர். எனினும், யோவான் போதித்த மனமாற்றம் எமதுள்ளத்தின் ஆழத்திலிருந்து எழ வேண்டியதாகும்.
எமதுள்ளத்தின் ஆழத்தில் தவறானவை ஒழிந்து புதிய மனநிலை உருவாக வேண்டும். அதனாலேயே, வெளிச்சடங்குகளை மட்டுமே மதித்த பரிசேயர்களை யோவான் "விரியன் பாம்புக் குட்டிகளே" (மத்தேயு 3:7) எனச் சீறினார். அப்படியாயின் வெறூம் திருவிழாக் கத்தோலிக்கர்களாக பரிசேய வாழ்க்கை வாழும் ஆசாரக் கத்தோலிக்கரான எமது செயல்கள் கடவுளுக்கு ஏற்றதாகுமா?
திருமுழுக்கு யோவான் விடுத்த அறைகூவல் நமக்கும் விடுக்கப்படுகிறது. "கோதுமையையும் பதரையும் பிரித்தெடுக்கின்ற சுளகு" (மத்தேயு 3:12) இறுதிக்கா லத்தில் மாட்சிமையோடு வரவிருப்பவரின் கையில் இருப்பதனால், நாமும் பதராக புறம்பே தள்ளப்படாது எச்சரிக்கையாக இருக்க வேண்டும். எனவே, இத்திரு வருகைக் காலத்தில் எல்லாம் வல்ல கடவுளிடம் மனம் திரும்பிச் செல்ல அவருடைய வழிகளைத் தயார் செய்ய முயலுவோம்.
நல்ல பாவப்பொறுத்தல் அருட்சாதனத்தை வாஞ்சை யோடு பெற்றுக்கொள்வோம். திருவருகைக் காலம் கடவுளின் வருகைக்காக நம்மையே தயாரிக்கின்ற காலமாகும். கடவுளை எதிர்கொள்ள மட்டுமல்ல, கடவுளை நம்முள் வரவேற்க ஆயத்தமாகும் காலமுமாகும். எனவே, அன்பின் ஆண்டின் ஆரம்பத்தில் நம்மையே ஆண்டவ ரிடம் ஒப்புக்கொடுத்து அவரை வரவேற்க ஆயத்தமா வோம். மறுபடியும் அவர் வரும்போது அவரை எதிர்கொள்ள "பாலை நிலமான" நாம் முன்வர வேண்டும். இதுவே, திருவருகைக் கால இரண்டாம் ஞாயிறு நற்செய்தி நமக்கு விடுக்கும் செய்தியாகும்.

Comments

Popular posts from this blog

நீயும் நானும் (ஆழமான அன்புறவினைத்தேடி ......)

திருவருகைக் கால வளையம் - Advent wreath

✠ புனிதர் ஃபிரான்சிஸ் சவேரியார் ✠ (St. Francis Xavier)