கிறிஸ்து பிறப்பை அர்த்தமாகும் அடையாளங்கள்

கிறிஸ்து பிறப்பை அர்த்தமாகும் அடையாளங்கள் (பாகம் I)
டிசம்பர் 10ஆம் திகதி இயேசு பாலன் பிறப்பதற்கான குடிலுக்கான எல்லா வேலைகளையும் முடித்துவிட்டு, குடிலுக்கு முன்னால் நின்று எப்படிச் செய்திருக்கிறோம் என்று குடிலின் அழகை சற்றேரசித்துக் கொண்டிருந்தேன் திடீரென பின்னாலிருந்து 'என்ன அப்படிப் பார்த்துக் கொண்டிருக்கிறாய்?" என்ற செல்லமான அடி ஒன்று முதுகைப் பதம் பார்த்தது. 'வாங்க பாதர் இப்பத்தான் முதல் முறையா குடில் செய்கிறேன் அதான் ..." 'ரொம்ப நல்லாத்தான்டா தம்பி செஞ்சுருக்க! இதுவரை எந்த வருஷமும் பார்க்காத அளவுக்கு மிக எளிமையாக, அருமையாகச் செய்திருக்கிறாய்" என்று சொல்லிக்கொண்டே, 'அதெல்லாம் இருக்கட்டும் இந்தக் குடிலைப் பார்க்கும்போது உனக்கு என்ன தோனுது?" ஒரு கேள்வியோடு மேலும் கீழும் பார்த்தார். 'என்ன தோனுதுன்னா? என்ன சொல்றது? எனக்குள்ளே முணுமுணுக்க ஆரம்பித்தான். உள்ளத்தில் முணுமுணுப்பதை உணர்ந்தவராய் மீண்டும் இந்த குடிலில் இருக்கின்ற ஒவ்வொன்றும், ஒவ்வொருவரும் ஒரு அடையாளங்கள், நம்முடைய வாழ்வில் நாம் எப்படி வாழவேண்டுமென்றும், அப்படி வாழ்ந்தால் நமக்கு கிடைக்கும் அரிய, பெரிய பொக்கிஷங்களையும் நம் கண்முன் நிறுத்தும் ஒப்புயர்வற்ற அடையாளங்கள். இந்த கிறிஸ்மஸ்ல இந்தக் குடிலில் இருக்கிற யாராவது உள்னோடு பேசி உனக்கு என்ன சொல்றாங்கன்னு நல்லா கேளு..." என்று அழுத்தமாகச் சொல்லிவிட்டு நகர்ந்தார்.
இந்தக் பதிவில் கிறிஸ்து பிறப்பு பொருவிழாவோடு பின்னிப் பிணைந்து வாழ்வின் அடையாளங்களாய்த் திகழும் குடில், அந்தக் குடிலில் தவழும் இயேசு பாலன், மரியாள், யோசேப்பு, மாட்டுத்தொழுவம், ஞானியர்கள், இடையர்கள், கிறிஸ்மஸ் தாத்தா, கிறிஸ்மஸ் கேரல்ஸ் என சில வருடங்களாக இவை என்னை புடம்போட உதவிய சில சிந்தனைத் துளிகள்.
ஒளிரும் குடில்:
கி.பி 1223ஆம் ஆண்டிலே இத்தாலி நாட்டின் அசிசி நகருக்கு அருகிலிருக்கின்ற கிரேச்சியோவை அடுத்துள்ள காடுகளில் பிரான்சிஸ் என்ற ஒரு சாதாரண மனிதர், மெசியர் ஜோவான்னி வெலீட்டா என்பவரோடு சேர்ந்து கிறிஸ்து பிறப்பைக் கொண்டாட விரும்பினார். ஒருநாள் பிரான்சிஸ் ஜோவான்னியை அழைத்து 'நாம் கிறிஸ்மஸ் கொண்டாட வேண்டுமென்றால், பெத்லகேமை நம் மத்தியில் கொண்டு வர வேண்டும்" எனக் கூறினார். இருவரும் சேர்ந்து கிரேச்சியோ ஒட்டியக் காட்டுப் பகுதிகளில் கொண்டு வந்த 'மறுபெத்லகேம்" தான் இன்று நாம் உருவாக்குகின்ற குடிலின் ஆரம்பம்!
எல்லாரும் நகரங்களிலும், வீடுகளிலும் தங்கள் வசதிக்கேற்ப இயேசுவின் பிறப்பைக் கொண்டாடி மகிழ்ந்த வேளையிலே, பிரான்சிஸ் காடுகளில் குடில் செய்து கிறிஸ்து பிறப்பைக் கொண்டாடி மகிழ்ந்தார். யாரும் கிறிஸ்துவை கொண்டு போகாத இடங்களுக்கு நாம் கிறிஸ்துவை எடுத்துச் செல்ல வேண்டும் என்பது பல இடங்களில் செய்யப்படுகின்ற குடில்களானது நமக்கு விடுக்கின்ற அழைப்பாகும். பல வேளைகளில் நாம் கோவில்களில் குடில் செய்வதோடும், வீடுகளில் அலங்கரிப்பதோடும் முடித்துக் கொள்கிறோம். ஆனால் குடில் சொல்லும் ஒரு முக்கியமான நற்செய்தி இயேசுவை வெறுப்பவர்களிடம் அவரைக் கொண்டு செல்வதும், இயேசுவை அறியாதவர்களிடம் அவரை அறிப்பதும், கிறிஸ்துவத்தைத் தாண்டி நம்முடைய சகோதர மதத்தினரிடம் அவருடைய பிறப்பின் மேன்மையை எடுத்துரைப்பதும் காலத்தின் தேவையாகும்.
இயேசு பாலன்:
ஒவ்வொரு முறையும் கிறிஸ்து பிறப்புக் குடிலைப் பார்க்கும் போதெல்லாம் நம் கண்களை முதலில் ஈர்க்கும் அடையாளம் குழந்தை இயேசுவே! பிள்ளையை துணிகளில் பொதிந்து தீவனத் தொட்டியில் கிடத்தினர்.(லூக் 2:7) என்பதை விவிலியத்தில் படித்துவிட்டு மிகவும் அழகாக குழந்தை இயேசுவை புதுப்புதுத்துணிகளால் ஜொலிக்கச் செய்கிறோம். ஆனால் இதைத்தாண்டி இந்த பாலனின் பிறப்பு எதைச் சுட்டிக்காட்டுகிறது? புனித பவுலடிகளார் கூறுகிறார். 'காலம் நிறைவேறிய போது திருச்சட்டத்திற்கு உட்பட்டிருந்த நம்மை மீட்டுத் தம் பிள்ளைகள் ஆக்குமாறு கடவுள் தம் மகனைப் பெண்ணிடம் பிறக்கச் செய்தார்" (கலா 4:4) என்று மீண்டும் அவ்வாறு பிறந்தபொழுது 'கடவுள் வடிவில் விளங்கிய அவர், கடவுளுக்கு இணையாயிருக்கும் நிலையை வலிந்து பற்றிக் கொண்டிருக்க வேண்டியதொன்றாகக் கருதாமல், தம்மையே வெறுமையாக்கி அடிமையின் வடிவை ஏற்று மனிதருக்கு ஒப்பானார்" (பிலி 2:6-7) என்றும் கூறுகிறார். இயேசு பாலனை அடையாள வடிவில் ஒவ்வொரு கிறிஸ்மஸ் பெருவிழாவிலும் பார்க்கின்ற நாம், அவர் எல்லாவற்றையும் துறந்து, ஏன் விண்ணக மாட்சியைக் கூடத்துறந்து நம்மிடையே பிறந்திருக்கிறார் என்பதைக் கருத்தில் கொள்வோம். எல்லாவற்றையும் சேர்த்துச் சேர்தது வைக்க ஆசைப்படும் நாமெங்கே? நாம் வாழ்வு பெறவேண்டுமென்பதற்காக அடிமையான இயேசு எங்கே? அடுத்தவர் யார் என்று கேட்டு அந்நியப்படுத்தும் நாம் எங்கே? அனைவரையும் அன்பு செய்வதற்காக மனுவுரு எடுத்த இயேசுவின் பிறப்பு எங்கே?
இயேசுவின் அம்மா!
எல்லோருக்கும் பிடிக்கின்ற ஒரு மாமனிதை என்றால் அது அம்மா தான்! இயேசுவோடு, அவரது பிறப்பில் நாம் அடையாள வடிவில் சந்திக்கின்ற இன்னொரு மனிதர் இயேசுவின் அம்மா மரியா. இயேசுவின் அம்மா என்பதற்காகவே நாம் அவர்கள் மீது எவ்வளவு அன்பு வைத்திருக்கிறோம் என்பதை நமக்கு யாரும் எடுத்துச் சொல்லத் தேவையில்லை. நம்மிடையே இருக்கின்ற அன்னையின் கோவில்களில் அலைமோதுகின்ற கூட்டங்களைப் பார்த்தாலே நமக்குத் தெரிந்து விடுகிறது. ஆனால் குடிலில் கோவில் கொண்டுள்ள இந்த அன்னையிடமிருந்து வாழ்க்கைக்கான பாடம் என்ன? குடிலில் இருக்கிற அன்னையின் சுரூபத்தையே உற்றுநோக்கிக் கொண்டிருந்த எனக்கு ஒரு கேள்வி. ஏன் அம்மா மரியா வணங்கிய கரங்களோடு தலை குனிந்தவாறே இருக்கிறார்கள்? விவிலியத்தைப் படிக்கும் போது தான் விடை தெரிகிறது. மரியா தன்னை ஆண்டவரின் அடிமையாக அடையாளப்படுத்திக் கொண்டதால்தான்! ஆகவே தான் 'நான் ஆண்டவரின் அடிமை" என்றும் (லூக் 1:38) அவர் 'தம் அடிமையின் தாழ்நிலையைக் கண்ணோக்கினார்" என்றும் (லூக் 1:48) அவர்களால் துணிவுடன் கூறமுடிகிறது.
நவீன உலகத்தின் நாகரீமிழந்த வாழ்வுமுறையென்றால் அது ஆணவப் போக்கும், அதிலிருந்து புறப்படும் பிறர் மீதான இழிவு மனப்பான்மையுமே! பதவி, பட்டம், ஆசி, அந்தஸ்த்து, பொறுப்பு, புகழ், பணம் பலம் என எல்லாம் சேர்ந்து, ஏழு பாவங்களில்தலையான பாவமாகிய ஆணவம் உலகை வழிநடத்த ஆரம்பித்து விட்டது என்றால் மிகையாகாது! குடிலில் குனிந்த தலையோடு இருக்கின்ற அன்னையிடமிருந்து நாம் வாழ்வாக்க வேண்டியது தாழ்ச்சி நிறைந்த வாழ்வே! இத்தகைய வாழ்வு மற்றவரைவிட உணர்ந்தவன், எல்லாரும், எனக்கத் தாழ்ந்தவர்கள் என்ற எண்ணம் நீங்கிய வாழ்வு, என்னுடைய எண்ணமும், என்னுடைய விருப்பமுமே எப்பொழுதுமே ஏற்றுக்கொள்ளப்பட வேண்டும் என்ற ஏக்கமில்லாத வாழ்வு. எல்லாவற்றிலும் இறைவனுக்கு அர்ப்பணித்து வாழும் வாழ்வாகும்.

Comments

Popular posts from this blog

நீயும் நானும் (ஆழமான அன்புறவினைத்தேடி ......)

திருவருகைக் கால வளையம் - Advent wreath

✠ புனிதர் ஃபிரான்சிஸ் சவேரியார் ✠ (St. Francis Xavier)