மறையுரைச் சிந்தனை (டிசம்பர் 08) - தூய கன்னிமரியாளின் அமலோற்பவ பெருவிழா

மறையுரைச் சிந்தனை (டிசம்பர் 08) - தூய கன்னிமரியாளின் அமலோற்பவ பெருவிழா
1858 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 25 ஆம் நாள் பெர்னதெத் என்ற ஆடு மேய்க்கும் சிறுமி லூர்து நகரில் உள்ள மசபேல் குகைக்கருகில் நின்றுகொண்டிருந்தாள். அப்பொழுது திடிரென்று வெண்மையான ஆடை அணிந்த பெண் ஒருவர் அவருக்கு முன்பாகத் தோன்றினார். அவரைப் பார்த்த பெர்னதெத், “அம்மா உங்களுடைய பெயர் என்ன? என்று கேட்டார். அதற்கு அவர், “நாமே அமல உற்பவம்” என்று பதிலளித்தார்.
ஆம், இன்று அன்னையாம் திருச்சபை மரியாளின் அமலோற்பவப் பெருவிழாவை மகிழ்வோடு கொண்டாடுகின்றது. இந்த நல்ல நாளில் இவ்விழா நமக்கு உணர்த்தும் செய்தி என்ன என்று சிந்தித்துப் பார்த்து நிறைவு செய்வோம்.
முதலில் இவ்விழாவின் வரலாற்றுப் பின்னணியைத் தெரிந்துகொண்ட பின்பு, அது உணர்த்தும் செய்தியை நாம் தெரிந்துகொள்வோம். கி.பி. ஏழாம் நூற்றாண்டில் கீழைத் திருச்சபையில் ‘மரியாளின் உற்பவம்‘ (The Conception of Mary) என்றதொரு விழா கொண்டாடப்பட்டு வந்தது. இவ்விழா மரியாளின் பிறப்பையும், அவரிடம் விளங்கிய நல்ல பண்புகளையும் பறைசாற்றுதாய் இருந்தது. படிப்படியாக இவ்விழா மேலைநாட்டு திருச்சபைக்கும் பரவியது.
கி.பி.பனிரெண்டாம் நூற்றாண்டில் இவ்விழா மரியாளின் மாசற்ற தன்மையும், தூய்மையையும் பறைசாற்றுவதாய் இருந்தது. அப்போதுதான் திருச்சபைத் தந்தையர்களிடையே மரியாளின் மாசற்ற தன்மையைப் பற்றிய விவாதம் எழுந்தது. மரியாள் கருவிலே பாவக்கறையின்றி பிறந்தால், அவர் கடவுளின் மீட்புத் திட்டத்திற்கு அப்பாற்பட்டவரா? என்பதுபற்றி பல்வேறு விவாதங்கள் எழுந்தன. இவற்றிற்கெல்லாம் முற்றுப்புள்ளி வைத்தாற்போல் 13 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த புனித டன்ஸ் ஸ்கோடஸ் என்பரின் வார்த்தைகள் அமைந்தன.
“மரியாள் கருவிலே ஜென்மப் பாவமின்றி பிறக்கக் காரணம் அவர் மாசு மருவற்ற இயேசுவைப் பெற்றெடுப்பதற்காக. அதலால், மரியாளின் அமலோற்பவம் இயேசுவின் பிறப்பை முன்னிட்டு, கடவுள் மரியாளுக்குக் கொடுத்த மிகப்பெரிய கொடை எனச் சொல்லலாம்” என்றார் அவர். அதன்பிறகு மரியாளைப் பற்றிய இத்தகைய சிந்தனை திருச்சபை எங்கும் பரவியது. மரியாள் லூர்து நகரில் தன்னை வெளிப்படுத்துவதற்கு நான்கு ஆண்டுகளுக்கு முன்பாக அதாவது 1854 ஆம் ஆண்டு திருத்தந்தை ஒன்பதாம் பத்திநாதர் “மரியாள் கருவிலே பாவக்கறை இன்றி தோன்றியவள்’ என்ற விசுவாசப் பிரகடனத்தை அறிக்கையிட்டார். அன்றிலிருந்து இன்றுவரை அவ்வாறே வழங்கப்பட்டு வருகின்றது.
இதுவரை மரியாளின் அமல உற்பவ பெருவிழாவின் வராலாற்றுப் பின்னணியை அறிந்த நாம், இப்போது இவ்விழா நமக்கு உணர்த்தும் செய்தியை அறிந்துகொள்வோம்.
தூய பவுல் எபேசியருக்கு எழுதிய திருமுகத்திலிருந்து எடுக்கப்பட்ட இன்றைய இரண்டாம் வாசகத்தில், “நாம் தூயோராகவும், மாசற்றவராகவும் தம் திருமுன் விளங்கும்படி, உலகம் தோன்றுவதற்கு முன்பே கடவுள் நம்மைக் கிறிஸ்து வழியாகத் தேர்ந்தெடுத்தார்” என்று வாசிக்கின்றோம். ஆம், நாம் ஒவ்வொருவரும் தூயவராக வாழவேண்டும். ஏனென்றால் நம் இறைவன் தூயவர் (மத் 5:348, லேவி 19:2).
ஆனால் பல நேரங்களில் திருமுழுக்கின் வழியாக தூயவர்கள் ஆனோம் என்ற உண்மையை உணர்ந்துகொள்ளாமல் கடவுளுக்கு கீழ்படியாமல் பாவக்கறை படிந்த வாழ்க்கை வாழ்ந்துகொண்டிருக்கும். தொடக்க நூலிலிருந்து எடுக்கப்பட்ட இன்றைய முதல் வாசகத்தில் ஆதிப்பெற்றோர்களான ஆதாமும், ஏவாளும் விலக்கப்பட்ட மரத்தின் கனியை உண்டால் பாவம் என்று தெரிந்தும்கூட அந்தக் கனியை உண்டு, பாவம்செய்தார்கள். அதேபோன்றுதான் நாமும் பாவம் என்று தெரிந்தும்கூட ஒவ்வொருநாளும் பாவசேற்றில் விழுந்துகொண்டிருக்கிறோம். இந்நிலை மாறவேண்டும். கடவுளுக்கு முன்னால் நாம் தூயவர்களாக வாழவேண்டும்.
கடவுளுக்கு முன்பாக தூயவர்களாக எப்படி விளங்குவது?. அதற்கு அன்னை மரியால்தான் நமக்கு மிகச் சிறந்த எடுத்துக்காட்டாக விளங்குகின்றார். அன்னை மரியாள் இறைவார்த்தைக்கு ஆம் என்று சொல்லி கீழ்படிந்து நடந்தார். அதன்வழியாக தூய வாழ்க்கை வாழ்ந்தாள். நாம் இறைவனுக்குக் கீழ்ப்படிந்து, இறைவனோடு இணைந்த வாழ்க்கை வாழ்கிறோமா? என்று சிந்தித்துப் பார்க்கவேண்டும்.
வயதான துறவி ஒருவர் மரணப்படுக்கையில் கிடந்தார். அப்போது அவரைப் பார்ப்பதற்காக பெரிய பெரிய மனிதர்கள் எல்லாம் வந்து போனார்கள். ஒருசிலர் அவரை ‘பெரிய அறிவாளி’ என்று பாராட்டிச் சென்றார். இன்னும் சிலர் அவரை ‘சிறந்த கொடை வள்ளல்’ என்றும், மற்றும் சிலர் அவரை ‘அமைதியே உருவானவர்’ என்றும் பாராட்டிவிட்டுச் சென்றார்.
எல்லாவற்றைக் கேட்டும் அந்தத் துறவி மிகவும் வருத்தத்தோடே இருந்தார். இதைப் பார்த்த துறவியின் உதவியாளர், அவரிடம், “எல்லாரும் உங்களை அறிவாளி, கொடைவள்ளல், அமைதியே உருவானவர் என்றெல்லாம் பாராட்டிச் செல்கிறார்களே, அப்புறம் எதற்கு இப்படிக் கவலையோடு இருக்கிறீர்கள்” என்று கேட்டார். அதற்கு அவர், “ எல்லாருமே என்னை எப்படியெல்லாமோ பாராட்டினார்கள். அது இருக்கட்டும். ஆனால் யாருமே என்னை தூயவர் என்று பாராட்டவில்லையே என்பதை நினைக்கும்போதுதான் எனக்கு வருத்தமாக இருக்கின்றது” என்றார். உடனே அவருடைய உதவியாளர் அவரிடம், “நீங்கள் தூயவர் என்று மற்றவர் சொல்லவேண்டும். உங்களைப் பற்றி நீங்களே சொல்லக்கூடாது” என்றார். இதைக் கேட்ட அந்த துறவி அமைதியானார்.
ஆம், தூய வாழ்வு வாழ்கிறோம் என்பதை ஆண்டவரும், அடுத்தவரும் கண்டு தெரிந்துகொள்ளவேண்டும். அதற்கு நாம் இறைவனோடும், அயலாரோடும், இயற்கையோடும் இணைந்திருக்கவேண்டும்.
ஆகவே மரியாளின் அமலோற்பவ பெருவிழாவைக் கொண்டாடும் இந்த நல்ல நாளில் நாமும் அன்னை மரியைப் போன்று ஆண்டவரின் கட்டளைகளைக் கடைப்பிடித்து தூயவர்களாய் வாழ்வோம். அதன்வழியாக இறையருள் பெறுவோம். 
- Fr Palay Mariaantonyraj. 2016

மறையுரைச் சிந்தனை (டிசம்பர் 08) - மரியாளின் அமல உற்பவப் பெருவிழா
பாரதியின் காலத்தின் குள்ளசாமி என்றதொரு சித்தர் வாழ்ந்துவந்தார். பாரதிக்கு அவர்மேல் எப்போதும் மிகுந்த மதிப்பும், மரியாதையும் இருந்தது. காரணம் மக்கள் செய்யக்கூடிய தவற்றை அவர் நேருக்கு நேர் சுட்டிக்காட்டிவிடுவார்.
ஒருநாள் குள்ளசாமி என்ற அந்த சித்தர் பழைய கந்தைகள், குப்பைகள் அடங்கிய ஒரு பொதிமூட்டையை முகுகில் சுமந்துவந்தார். அவரைப் பார்த்த பாரதிக்கு ஒரே ஆச்சரியமாகப் போய்விட்டது. நாம் வெகுவாக மதிக்கக்கூடிய ஒரு மனிதர் இப்படி பிச்சைக்காரரைப் போன்று குப்பையைச் சுமந்து வருகிறாரே என்று உள்ளுக்குள்ளே ஒருவிதமான நெருடலை உணர்ந்தார்.
வேகமாகச் சென்ற பாரதி சித்தரிடம், “எதற்காக இப்படி பழையகந்தையையும், குப்பையையும் சுமந்து வருகிறீர்கள்?” என்று கேட்டார். அதற்கு அவர், நானோ வெளியில்தான் அழுக்கைச் சுமந்து அலைகிறேன்; ஆனால் மக்களோ, “உள்ளுக்குள் அழுக்கையும், குப்பையையும் சுமந்து திரிகிறார்கள்” என்று எல்லாவற்றையும் போட்டு உடைத்தார். “புறத்தே நான் சுமக்கிறேன்; அகத்தினுள்ளே இன்னொதொரு பழங்குப்பையை சுமக்கிறாய் நீ” என்று இதனை பாரதி தன்னுடைய கவிதையிலே எழுதுகிறார்.
சித்தர் பாரதியைப் பார்த்துச் சொன்ன வார்த்தைகள் நமக்கு பொருந்தும். வெளிப்புறத்திலே ஆடம்பரமாக, அழகாகக் காட்சியளிக்கும் நாம் உட்புறத்தில் பாவக்கறை படிந்த வாழ்வு வாழ்கிறோம். இத்தகைய ஒரு பின்னணியில் இன்று நாம் கொண்டாடும் ‘கருவிலே பாவக் கறையில்லாது பிறந்த மரியன்னையின் விழாவைக் கொண்டாடுவது மிகப் பொருத்தமாக இருக்கும்.
இன்று திருச்சபையானது மரியாளின் அமல உற்பவப் பெருவிழாக் கொண்டாடுகிறது. மரியாள் கருவில் உதிக்கும்போதே பாவக்கறையில்லாமல் பிறந்தார் என்பதே இவ்விழாவின் சாரம்சமாக இருக்கிறது. இவ்விழா கீழைத் திருச்சபையில் 7 ஆம் நூற்றாண்டிலிருந்தும், மேலைத் திருச்சபையில் 9ஆம் நூற்றாண்டிலிருந்தும் கொண்டாடப்பட்டு வருகிறது.
பதிமூன்றாம் நூற்றாண்டில் வாழ்ந்த கான்டர்பரி என்பவர் ‘அமல உற்பவம்’ என்ற தலைப்பிலே ஒரு புத்தகத்தை எழுதினார். இப்புத்தகத்தில் அவர் ‘மரியாள் கருவில் தோன்றும்போது பாவக்கறையில்லாது – ஜென்மப் பாவமில்லாது – உதித்தார்’ என்று எழுதி இருந்தார். இதை எதிர்த்து இறையியலாளர்களின் இளவரசர் என்று அழைக்கப்படக்கூடிய தாமஸ் அக்குவினாஸ் ‘மரியாள் பாவக்கறையில்லாமல் தோன்றினாள் என்று சொன்னால் கடவுளது மீட்பின் பயன் மரியாளிடத்தில் செயல்படாது போய்விடுமே’ என்று விவாதம் செய்தார். ஆனால் அவருக்குப் பின்னர் வந்த யோவான் டன்ஸ் ஸ்காட்டுஸ் என்பவர், “கடவுளது மீட்பின் பலன் மரியாளுக்குதான் அதிகமாகத் தேவைப்படுகிறது” என்று சொல்லி இந்த விவாதத்திற்கு ஒரு முற்றுப்புள்ளி வைத்தார். அதன்பின்னர் இக்கோட்பாடு படிப்படியாக வளர்ந்துகொண்டே வந்தது.
1854 ஆம் ஆண்டு டிசம்பர் 8 ஆம் நாள் அன்று திருத்தந்தையாக இருந்த ஒன்பதாம் பத்திநாதர் இறை உந்துதலின் பேரில் ‘மரியாள் கருவிலே பாவக்கறையில்லாமல் உதித்தாள்’ என்று சொல்லி ‘அமல உற்பவியான மரியா’ என்ற கோட்பாட்டைப் பிரகடம் செய்தார். இதற்கு முத்தாய்ப்பாக 1858 ஆம் ஆண்டு மார்ச் 25 ஆம் தேதி லூர்து நகரிலே பெர்னதெத்து என்ற சிறுமிக்குக் காட்சி தந்த மரியா ‘நாமே அமல உற்பவம்’ என்று இக்கோட்பாட்டை உறுதி செய்தார். இவ்வாறு திருச்சபையிலே மரியாள் அமல உற்பவி’ என்ற விழாவானது கொண்டாடப்பட்டு வருகிறது.
இவ்வேளையில் மரியாள் அமல உற்பவி என்று சொல்வதற்கு விவிலியச் சான்றுகள் இருக்கின்றதா என்று சிந்தித்துப் பார்ப்போம்.
இன்றைய நற்செய்தி வாசகத்தில் வானதூதர் கபிரியேல் மரியாவுக்குத் தோன்றும்போது, “அருள் நிறைந்தவளே வாழ்க!” என்று தான் வாழ்த்துகிறார் (லூக் 1:29). மரியாள் இறைவனின் அருளை நிரம்பப் பெற்றுக்கிறாள் என்பதே இதன் அர்த்தமாக இருக்கிறது. மேலும் தமதிருத்துவத்தில் இரண்டாம் ஆளாக இருக்கக்கூடிய மகனாகிய இயேசு, எபிரேயருக்கு எழுதப்பட்ட திருமுகம் 4:15 ல் வாசிப்பதுபோல ‘பாவம் செய்யாதவர்’. எனவே பாவம் செய்யாத ஆண்டவர் இயேசு மனிதனாகப் பிறக்கவேண்டும் என்று சொன்னால் பாவமே அறியாத ஒரு பெண்ணின் வயிற்றில்தான் மகனாகப் பிறக்கவேண்டும். அதனால்தான் கடவுள் மரியாளை பாவக்கறை சிறிதும் இல்லாமல் தோன்றச் செய்தார்.
ஆக, “அமல உற்பவம்” என்பது மரியாள் பெற்ற பாக்கியம் என்று சொல்வதைவிடவும், தன் மகன் இயேசுவின் பொருட்டு கடவுள் மரியாளுக்குக் கொடுத்த பேறு என்று சொல்வது மிகப் பொருத்தமாக இருக்கும்.
இன்றைய முதல்வாசகத்தில் முதல் பெற்றோரான ஆதாமும், ஏவாளும் தங்களுடைய கீழ்படியாமையால் கடவுளால் உண்ணக்கூடாது என்று பணிக்கப்பட்ட மரத்தின் கனியை உண்டனர். அதனால் பாவத்தை வருவித்துக் கொண்டனர். ஆனால் மரியாளோ தன்னுடைய பாவக்கறையற்ற வாழ்வால் - கீழ்படிதனால் – தன்னுடைய மகன் இயேசுவின் வழியாக பாவத்தை வெற்றிகொள்கிறார்; பாவத்திற்கு காரணமாக இருந்த சாத்தானை தன்னுடைய காலால் நசுக்குகிறார். நாமும்கூட இன்றைய இரண்டாம் வாசகத்தில் கேட்பது போல ‘தூயோராக, மாசற்றவராக’ நடக்கும்போது பாவத்தை வெற்றி கொள்ளலாம் என்பதே இங்கே உணர்த்தப்படும் செய்தியாக இருக்கிறது.
மரியாள் தன்னுடைய மாசற்ற வாழ்வால் பாவத்தை வெற்றிகொண்டாள். நாமும் மாசற்ற வாழ்வு வாழ்ந்தோம் என்றால் நம்மாலும் பாவத்தை வெற்றிக்கொள்ள முடியும் என்பதை ஆழமாக சிந்தித்துப் பார்க்கவேண்டும்.
ஆனால் இன்றைக்கு நம்மால் தூய, மாசற்ற வாழ்க்கை வாழமுடிகிறதா? என்று நினைத்துப் பார்க்கும்போது அது மிகப்பெரிய கேள்விக்குறியாக் இருக்கிறது. சிந்தனையால், சொல்லால், செயலால் அன்றாடம் எத்தனையோ பாவங்களைச் செய்கிறோம்; கடவுளை விட்டுப் பிரிந்து வெகுதொலைவில் வாழ்கிறோம். இந்நிலை மாறவேண்டும். திருப்பாடல் 51:10 ல் வாசிப்பதுபோல “இறைவா தூயதோர் உள்ளத்தை என்னுள் படைத்தருளும்’ என்று தூய இறைவனைப் பார்த்து ஜெபிப்போம். தூயராய் நடப்போம்.
அடுத்ததாக மரியாளின் அமல உற்பவப் பெருவிழாக் கொண்டாடும் நாம் மரியாளின் மீது ஆழமான பக்திகொண்டு வாழே வேண்டும். “மாதாவின் பிள்ளை, அவலமாய் சாவதில்லை” என்பர். நாம் மரியாவின் மீது ஆழ்ந்த நம்பிக்கை கொண்டு வாழ்வோம்.
புனித அந்தோனியார் தன்னுடைய வாழ்வில் பல்வேறு சோதனைகளையும், இன்னல்களையும் சந்தித்து வந்தார். அப்படிப்பட்ட நேரங்களில் எல்லாம் அவர் மரியன்னை நோக்கி இவ்வாறு மன்றாடுவார், “என் அரசியே! என் தாயே! என்மேல் கவனமாய் இரும்” என்று. (My Queen, My Mother, Water over me). இதனால் அந்தோனியார் இறப்பதற்கு ஒருசில நாட்களுக்கு முன்பாக மரியன்னை அவருக்கு கட்சி தந்து, “உன் நேர்மைக்கும், என்மீது நீ கொண்டிருந்த அன்பிற்கும் விண்ணகத்தில் உனக்கொரு இடம் காத்திருக்கிறது” என்று சொல்லி மறைந்தார்.
மரியாள் மீது ஆழமான பக்திகொண்டு வாழும்பொது, இறைவன் தன் அன்னை வழியாக நமக்கு எல்லா ஆசியையும் தருவார் என்பதே இந்நிகழ்வானது நமக்கு எத்துரைக்கிறது. எனவே மரியாள் அமல உற்பவி என்ற விழாவைக் கொண்டாடும் இவ்வேளையில் மரியாவைப் போன்று நாமும் தூயோராக, மாசற்றவராக வாழ்வோம். இறையருளை நிறைவாய் பெறுவோம். -
 Fr Palay Mariaantonyraj. 2015

அன்னை மரியாளின் இறைப்பற்று
இறைவனின் முன் தன்னையே ஓர் அடிமைநிலைக்குக் கையளித்த அன்னை மரியாளின் தாழ்ச்சி நமக்கெல்லாம் சிறந்த எடுத்துக்காட்டு. கடவுள் எதைச்சொன்னாலும், அதை செய்வதற்கு தயாராக இருக்கிறேன் என்பதுதான் அன்னைமரியாளின் வார்த்தைகளின் பொருள். கடவுள் தான் அவளது வாழ்வில் எல்லாம் என்பதனை இந்த வார்த்தைகளில் வெகு எளிதாக வெளிப்படுத்திவிடுகிறார். அது ஏதோ, சாதாரண வார்த்தைகள் அல்ல, மாறாக, வாழ்வின் அனுபவம் தந்த பாடம். சிறு வயதிலிருந்தே, அன்னை மரியாள் கடவுளோடு நெருங்கியிருக்கிறாள். கடவுளின் பிரசன்னத்தை தன்னுள்ளே அதிகமாக உணர்ந்தவன் அன்னை கன்னிமரியாள். அந்த அனுபவம்தான், கபிரியேல் தூதுவரின் செய்தியினை, சந்தேகமில்லாமல் ஏற்றுக்கொள்ள துணைபுரிந்தது.
தனது வாழ்வில் தனக்கென்று எதற்குமே அன்னை கன்னிமரியாள் ஆசைப்பட்டது கிடையாது. அவளது எண்ணமெல்லாம் கடவுள்தான். அவள் சிந்தனையெல்லாம் கடவுளைத்தழுவியதாக இருந்தது. இந்த உலகத்திலே அவளுக்கென்று இருந்த உறவாக கடவுளைப்பார்த்தாள். கடவுள் தான் அவளுக்கு உலகம். கடவுள் இல்லாத ஒரு வாழ்வை அவளால் கற்பனை செய்துகூட பார்க்க முடியாது. அத்தகைய ஒரு இறைப்பற்று தான், அவளது விசுவாசத்தை இறுதிவரை உறுதியுள்ளதாக வைத்திருந்தது. வாழ்வில் என்ன நடந்தாலும் பொறுமையாக, நிதானமாக இருக்கச்செய்தது. யார் “உன்னத கடவுளின் மகன் எனப்படுவார்” என்று முன்மொழியப்பட்டவரே இறந்தபோதிலும், அவளது நம்பிக்கை இறக்கவில்லை. நிதானம் இழக்கவில்லை. கடவுளது அற்புதத்திற்காக, அதிசயத்திற்காக பொறுமையாக இருக்கிறார்.
கடவுளோடு நெருங்கி இருக்கும் பண்பை அன்னை மரியாள் நமக்குக்கற்றுத்தருகிறார். அன்னை மரியாளின் பார்வையில் நாம் கடவுளைப்பார்த்தோமென்றால், வாழ்வின் எந்த சூழ்நிலையிலும் நாம் நிதானம் இழக்க மாட்டோம். கடவுளைப்பற்றிய சந்தேகம் கொள்ள மாட்டோம். அதற்காக இறைவனை மன்றாடுவோம்.-
 அருட்பணி. தாமஸ் ரோஜர்
=======================

அன்னை மரியின் அமல உற்பவம் !
இயேசுவில் இனிய இணைய தள அன்பர்களே,
லூர்து நகரில் பெர்னதத்துக்குக் காட்சி தந்தபோது, அன்னை மரியா தன்னைப் பற்றிச் சொன்னது: நாமே அமல உற்பவம். பெர்னதத் பங்குத் தந்தையிடம் சென்று தான் கண்ட காட்சிகளையெல்லாம் சொன்னபோது நம்பாத பங்குத் தந்தை, நாமே அமல உற்பவம் என்று அன்னை சொன்னதாக பெர்னதத் சொன்னபோதுதான் அந்தக் காட்சிகள் உண்மையானவை என்று நம்பினார். அன்னை மரியே தன்னைப் பற்றி வெளிப்படுத்திய இந்த இறையியல் உண்மையைத் திருச்சபையின் தொடக்க காலத்திலிருந்தே கிறித்தவர்கள் நம்பி ஏற்றுக்கொண்டுள்ளனர்.
கடவுளின் தாயாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட மரியாவை இறைவன் தாயின் கருவிலேயே தூய்மை நிறைந்தவராக உருவாக்கினார் என்பதே இந்த விசுவாச சத்தியத்தின் பொருள். நாம் மாசற்றோராகவும், தூயோரகவும் அவர் திருமுன் நிற்க வேண்டுமென்று உலகம் தோன்றுமுன்பே கடவுள் நம்மைக் கிறிஸ்துவுக்குள் தேர்ந்துகொண்டார் (எபே 1:4) என்று இறைவார்த்தை கூறுகிறது. உலகம் உருவாகுமுன்பே கடவுள் நம் ஒவ்வொருவரையும் தேர்ந்துகொண்டாரென்பது உண்மையென்றால், நம் அனைவருக்கும் மாதிரியாக அன்னை மரியாவையும் உலகம் உருவாகும் முன்பே தூயவராக, சென்ம மாசற்றவராக, அமல உற்பவியாக இறைவன் தேர்ந்தெடுத்தார் என்பதில் எந்த வியப்பும், அதை நம்புவதில் எந்தத் தயக்கமும் இருக்க முடியாதல்லவா!
மன்றாடுவோம்: தூய்மையின் உறைவிடமே இறைவா, உமது திருமுன் தூயோராகவும், மாசற்றவராகவும் விளங்க எங்கள் அனைவரையும் நீர் தேர்ந்தகொண்டீரெ. உம்மைப் போற்றுகிறோம். அதற்கு முன்னோடியாக அன்னை மரியாவைத் தாயின் வயிற்றிலேயே மாசற்றவராகத் தேர்ந்துகொண்டீரெ. அதற்காக உம்மை வாழ்த்துகிறோம். நாங்கள் தூயவராக என்றும் வாழ எங்களுக்கு அருள் தந்தருளும். உமக்கே புகழ், உமக்கே நன்றி, உமக்கே மாட்சி, ஆமென். -
 அருள்தந்தை குமார்ராஜா
--------------------------
''வானதூதர் மரியாவுக்குத் தோன்றி, 'அருள்மிகப்பெற்றவரே வாழ்க!
ஆண்டவர் உம்மோடு இருக்கிறார்' என்றார்'' (லூக்கா 1:28)
அன்பார்ந்த இணையதள நண்பர்களே!
-- அன்னை மரியாவை இயேசுவின் தாய் எனப் போற்றுகின்

Comments

Popular posts from this blog

நீயும் நானும் (ஆழமான அன்புறவினைத்தேடி ......)

திருவருகைக் கால வளையம் - Advent wreath

✠ புனிதர் ஃபிரான்சிஸ் சவேரியார் ✠ (St. Francis Xavier)