மகிழ்ச்சியை தேடுங்கள்!

[† திருவருகைக்காலம் ~ மூன்றாம் ஞாயிறு †
(11 டிசம்பர் 2016)

† எசாயா 35:1-6,10
† யாக்கோபு 5:7-10
† மத்தேயு 11:2-11

மகிழ்ச்சியை தேடுங்கள்!

'மகிழ்ச்சியை திறங்கள்!' - ‘Open Happiness!’ - என்கிறது கோகோ-கோலா!

'மகிழ்ச்சியை வாங்குங்கள்!' - ‘Buy Happiness!’ - என்கின்றன ஆன்லைன் கடைகள்!

'மகிழ்ச்சியை தேயுங்கள்!' - ‘Swipe Happiness!’ - என்கின்றன வங்கிகளின் டெபிட் கார்டுகள்!

'மகிழ்ச்சியை தேடுங்கள்!' - ‘Search Happiness!’ என்கிறது இன்றைய இறைவாக்கு வழிபாடு!

திருவருகைக்காலத்தின் மூன்றாம் ஞாயிற்றை 'மகிழ்ச்சி ஞாயிறு' என நாம் கொண்டாடுகிறோம்.

மகிழ்ச்சியைப் பற்றி நாம் மூன்று மூடநம்பிக்கைகளைக் கொண்டிருக்கின்றோம்:

மூடநம்பிக்கை 1: 'அதிகம் பெறுவதில்தான் மகிழ்ச்சி இருக்கிறது!'

சின்ன வயசுல சிகரெட் அட்டைகளை நாம் சேர்த்து வைத்து விளையாடியிருக்கிறோம். அதிகமாக சிகரெட் அட்டைகள் சேர்த்து வைத்திருக்கும் சிறுவனே அவனது கூட்டத்தில் பலசாலி எனக் கருதப்படுவான். ஆனால் கொஞ்சம் வயது வந்த பிற்பாடு அவன் தன் சிகரெட் அட்டைகளை வெளியே கொண்டு வந்து, 'நான்தான் அதிக பணக்காரன்!' எனச் சொன்னால் எல்லாரும் சிரிப்பார்கள். அவன் உடனடியாக தன் சிகரெட் அட்டைகளை விட்டுவிட்டு பணம் என்ற அட்டையை சம்பாதிக்க ஆரம்பிக்கிறான். நிறைய பணத்தாள்களை அல்லது கடன் அல்லது வரவு அட்டைகளை வைத்திருக்க ஆரம்பிக்கிறான். அதிகம் கொண்டிருத்தலே மகிழ்ச்சி என்பது நம் உள்ளத்தில் விதைக்கப்பட்டுவிடுகிறது. கொஞ்சம் குறைந்தாலும் மகிழ்ச்சி குறைந்துவிடுகிறது.

மூடநம்பிக்கை 2: 'நிபந்தனைகள் நிறைவேறினால்தான் மகிழ்ச்சி!'

'இது கிடைத்தால் மகிழ்ச்சி!' 'அவர் இப்படிச் செய்தால் மகிழ்ச்சி!' 'எனக்கு இது நிறைவேறினால் மகிழ்ச்சி!' என நிபந்தனைகளை நமக்கு நாமே விதித்து, அந்த நிபந்தனைகள் நிறைவேறினால்தான் மகிழ்ச்சி என நினைக்கிறோம். நிபந்தனைகள் மாறிக்கொண்டே இருக்கும். எப்படி? நான் 12ஆம் வகுப்பு படிக்கிறேன் என வைத்துக்கொள்வோம். 'ஆண்டு இறுதித்தேர்வில் 1100 மதிப்பெண்கள் பெற்றால் மகிழ்வேன்' என நான் எனக்கு நானே நிபந்தனை விதித்துக்கொள்கிறேன். மதிப்பெண்கள் பெற்றுவிடுகிறேன். ஆனால் ஒருநாளில் அது மறைந்துவிடுகிறது. 'மருத்துவம் அல்லது பொறியியல் படிப்பிற்கு இடம் கிடைத்தால் மகிழ்வேன்' என அடுத்த நிபந்தனை விதிக்கிறேன். 'விடுதியில் இடம் கிடைத்தால்,' 'நல்ல நண்பர்கள் கிடைத்தால்,' 'நல்ல வார்டன் கிடைத்தால்' என லிஸ்ட் நீண்டு கொண்டே போகிறது. மகிழ்ச்சியும் நமக்கு கிடைத்தபாடில்லை. வண்ணத்துப்பூச்சி போல ஒரு பூவிலிருந்து மற்றொரு பூவிற்கு பறந்துகொண்டே இருக்கிறோம்.

மூடநம்பிக்கை 3: 'மகிழ்ச்சி எனக்கு தேவையில்லை!'

வாழ்க்கை என்பது மகிழ்ச்சியும், துன்பமும் கலந்தது என்று சொல்லும் சிலர், மகிழ்ச்சி கடந்துவிடும் என்பதற்காக, அது வந்தாலும் அதை அனுபவிப்பதில்லை. அடுத்து வரப்போகும் துன்பத்திற்கு தயார் செய்வது பற்றி யோசித்து அதை எதிர்நோக்கத் தயராகிவிடுகின்றனர். 'மகிழ்ச்சிக்கு நான் தகுதியில்லை' அல்லது 'மகிழ்ச்சி எனக்குத் தேவையில்லை' என்ற உணர்வு இங்கே வந்துவிடுகிறது. மற்றொரு பக்கம், இந்த வகையினர் அடுத்தவர்களின் மகிழ்ச்சியையும் தவறாகப் பார்ப்பர்.

மேற்காணும் மூன்று மூடநம்பிக்கைகளும் மகிழ்ச்சியைப் பற்றி நாம் கொண்டிருக்கிற தவறான புரிதல்களே!

மகிழ்ச்சி ஒரு வித்தியாசமான உணர்வு. நாம் அதிகம் முயற்சி செய்து பெறும் உணர்வும் இதுதான். வெகு எளிதாக நம்மிடமிருந்து பறிபோவதும் இதுதான்.

புதிய பட்டுச்சேலை கட்டி, தலைநிறைய பூ வைத்து, உதட்டெல்லாம் புன்னகை மலர நாம் அனுபவிக்கும் பிறந்தநாள் மகிழ்ச்சி, விளக்கு எண்ணெய் ஒரு துளி சேலையில் பட்டவுடன் பறந்து போய்விடுகிறுது. அந்த சிறு துளி எண்ணெய் நம் எண்ணமெல்லாம் நிரம்பிவிடுகிறது.

மகிழ்ச்சி இவ்வளவு மெல்லிய உணர்வா?

மகிழ்ச்சியை நான் எப்படி தக்க வைத்துக்கொள்வது? அல்லது அதை ஒரு தொடர் அனுபவமாக ஆக்கிக்கொள்வது?

நற்செய்தி வாசகத்திலிருந்து நாம் தொடங்குவோம்.

இன்றைய நற்செய்தி வாசகம் (காண். மத்தேயு 11:2-11) இரண்டு படிகளாக நடந்தேறுகிறது: (அ) சிறையில் இருக்கும் யோவான் இயேசுவிடம் தன் சீடர்களை அனுப்பி, வந்திருக்கும் இயேசுதான் மெசியாவா என்பதை கேட்டுவரச் செய்கின்றார். (ஆ) இயேசு அதற்குப் பதில் சொல்வதோடு அல்லாமல், தொடர்ந்து, 'மனிதராய்ப் பிறந்தவருள் திருமுழுக்கு யோவானை விடப் பெரியவர் எவரும் தோன்றியதில்லை' என்று அவரைப் பாராட்டுகின்றார்.

மகிழ்ச்சிக்கும் இந்த இரண்டு படிநிலைகளுக்கும் என்ன தொடர்பு?

குழந்தையாக எலிசபெத்தின் வயிற்றில் இருந்த திருமுழுக்கு யோவான் மரியாளின் வாழ்த்துச் செய்தி கேட்டவுடன் துள்ளி மகிழ்ந்து சிரிக்கின்றார். இன்று சிறை என்னும் வயிற்றில் இருக்கும் யோவான் இயேசுவின் செய்தி கேட்டு சிரிக்கின்றார். யோவானைப் பொறுத்தவரையில் மகிழ்ச்சி என்பது இறைவனின் பிரசன்னத்தைக் கண்டடைவதில்தான் இருக்கிறது என்பது இங்கே தெளிவாகிறது.

இறைவனின் பிரசன்னம் எங்கே இருக்கிறது? - என்பது அடுத்த கேள்வி.

'கடவுள் தம் உருவில் மனிதரைப் படைத்தார். தம் சாயலிலேயே அவர்களைப் படைத்தார்' (தொநூ 1:27) என விவிலிய படைப்பு நிகழ்வு கூறுகிறது. அப்படியென்றால் இறைவன் நம் உள்ளே தான் இருக்கிறார்.

அல்லது

இறைவன் நமக்கு வெளியே நிற்கும் ஆற்றலாக இருக்கின்றார்.

அவர் அனைத்தையும் 'கடந்தவர்.' இருந்தாலும் 'உள் உறைபவர்'. ஆகையால்தான் அவர் 'கட-வுள்.'

இப்படியே நாம் புரிந்து கொள்வோம்.

'மெசியாவின் வருகையின்போது' இப்படியெல்லாம் நடக்கும் என்று எசாயா இறைவாக்குரைத்திருந்தார் (காண். 35:5-6, 42:18). இன்றைய முதல் வாசகத்தில் நாம் அந்த அறிகுறிகளையே வாசிக்கின்றோம்:

'பார்வையற்றவரின் கண்கள் பார்க்கும். காது கேளாதோரின் செவிகள் கேட்கும். கால் ஊனமுற்றோர் துள்ளிக் குதிப்பர். வாய்பேசாதோர் மகிழ்ந்து பாடுவர். ஆண்டவரால் விடுவிக்கப்பட்டோர் திரும்பி வருவர்.'

ஆக, மெசியாவின் வருகையின்போது ஒரு தலைகீழ் மாற்றம் உருவாகிறது. அல்லது ஒரு புதிய பிறப்பு உண்டாகிறது. பழையது மறைகிறது. குறைகள் நீங்கி நிறைவு பிறக்கிறது. இப்படியாக, மாற்றம், புதிய பிறப்பு, நிறைவு மகிழ்ச்சியைக் கொண்டுவருகிறது.

இன்றைய முதல் வாசகத்தில் (காண். எசா 35:1-6, 10) 'மகிழ்ச்சி' என்ற பொருள் மூன்று வார்த்தைகளில் (அக்களி, களிப்படை, மகிழ்) என ஏழு முறை பயன்படுத்தப்படுகிறது. மெசியாவின் வருகையும், நாடும், நகரமும் புதுப்பிக்கப்படுதலும், இவற்றால் எழும் மகிழ்ச்சியும் ஒன்றோடொன்று இணைந்து செல்கிறது.

இன்றைய இரண்டாம் வாசகத்தில் (காண். யாக் 5:7-10) தன் திருச்சபைக்கு பொறுமை மற்றும் துன்பங்களை ஏற்றுக்கொள்ளுதல் பற்றி எழுதும் திருத்தூதர் யாக்கோபு அவர்களுக்கு முன்மாதிரியாக, 'ஆண்டவரின் பெயரால் பேசிய இறைவாக்கினரை உங்களுக்கு மாதிரிகளாகக் கொள்ளுங்கள்' என்கிறார். 'ஆண்டவரின் பெயரால் பேசிய இறைவாக்கினர்' முதல் ஏற்பாட்டு மோசேயையும் குறிக்கலாம். அல்லது இரண்டாம் ஏற்பாட்டு திருமுழுக்கு யோவானையும் குறிக்கலாம். மேலும், யாக்கோபு விவசாய உருவகம் ஒன்றைக் கையாளுகின்றார்: 'பயிரிடுபவர் விதைத்தபின் நல்ல விளைச்சலை எதிர்பார்த்து முன்மாரியும் பின்மாரியும் பொழியும் அளவு பொறுமையாய் இருப்பது போல பொறுமையார் இருங்கள்!'

நிலத்தில் இன்று விதை விதைக்கிறேன் என வைத்துக்கொள்வோம். எனக்குப் பொறுமை இல்லாமல் நாளை நான் அதை தோண்டு எடுத்து, 'வளர்கிறதா, இல்லையா!' எனப் பார்த்தால், நான் விதைகளின் வீரியத்தையே அழித்துவிடுகிறேன். விதை விதைக்கப்படும் போது அது எனக்கு துன்பம் தந்தாலும், அது விளைச்சல் தரும்போது எனக்கு மகிழ்ச்சி தருகிறது.

ஏற்கனவே குறிப்பிட்டது போல நற்செய்தி வாசகம் இரண்டு மேடைகளில் நடக்கிறது. ஒரு மேடையில் திருமுழுக்கு யோவானும் அவருடைய சீடர்களும் இருக்கின்றனர். அடுத்த மேடையில் இயேசுவும் மக்களும் இருக்கின்றனர். திருமுழுக்கு யோவானின் சீடர்கள் சென்றவுடன், இயேசு மக்களிடம் திருமுழுக்கு யோவான் பற்றி பேச ஆரம்பிக்கின்றார்.

'எதைப் பார்க்க பாலைவனத்துக்குப் போனீர்கள்?'

'நாணலைப் பார்க்கவா?'

'மெல்லிய ஆடை அணிந்தவரைப் பார்க்கவா?'

'இறைவாக்கினரையா?'

'இல்லை...இறைவாக்கினரைவிட மேலானவரையே!' என மொழிக்கின்றார் இயேசு.

இவ்வாறாக, யோவான் ஒரு நாணலோ, மெல்லிய ஆடை அணிந்தவரோ, இறைவாக்கினரோ அல்லர் என்கிறார் இயேசு. பாலஸ்தீனத்துப் பாலைவனத்தில் நாணல் புற்கள் நிறைய உண்டு. யோர்தான் ஆற்றங்கரையிலும் நாணல் புற்கள் இருந்தன. நாணலின் இயல்பு காற்றில் ஆடக்கூடியது. காற்று செல்லும் திசையில் எல்லாம் அதுவும் செல்லும். யோவான் நாணல் அல்ல. அவர் நிலையான மரம் போல நின்று ஏரோதின் பேச்சில் அலைக்கழிக்கப்படாமல் துணிந்து நிற்கின்றார். யோர்தான் ஆற்றங்கரையில்தான் நிறைய அரச மாளிகைகள் இருந்தன. அங்கிருந்தவர்கள் மெல்லிய ஆடை அணிந்திருந்தனர். பாலைவனத்தின் சூட்டை தாங்குவதற்கு மெல்லிய ஆடைகள்தான் ஏற்றவை. ஆனால் அவை எளிதில் கிழிந்துவிடக்கூடியவை. அரச குடும்பத்தினரும், பணக்காரர்களும் மட்டுமே அவற்றை வாங்க முடியும். எளிதில் கிழியாத ஆனால் சூடு தரக்கூடிய கடினமான ஆடைகளையே வறியவர்கள் அணிந்தனர். திருமுழுக்கு யோவான் ஒட்டக மயிராடை அணிந்தார் என்கின்றனர் நற்செய்தியாளர்கள். ஆக, மெல்லிய ஆடை அணிந்தவர் அல்லர் யோவான். மாறாக, மெல்லிய ஆடை அணிந்தவர்களுக்கு எதிராக குரல் கொடுப்பவர். அடுத்ததாக, இறைவாக்கினர். இறைவாக்கினர் என்பவர் கடவுளுக்கும், மனிதருக்கும் இணைப்பாளராக இருப்பவர். அவருக்கு கடவுள் தன்னை வெளிப்படுத்துவதில்லை (மோசேக்கு தவிர!). ஆனால், இயேசுவின் வடிவில் கடவுளைப் பார்க்கும் பேறு பெறுகிறார் யோவான். ஆக, அவர் இறைவாக்கினரைவிட மேலானவர்.

இவ்வாறாக, மெசியாவின் வருகையின் அறிகுறிகளைக் கண்டுகொள்வதில் மகிழ்ச்சி இருக்கிறது என்பதை இன்றைய வாசகங்கள் பதிவு செய்கின்றன.

இவை தரும் வாழ்வியல் சவால்கள் எவை?

அல்லது

மகிழ்ச்சியை நாம் பெற்றுக்கொள்ள செய்ய வேண்டியன எவை?

1. நான் மட்டுமே!

'பார்வை இல்லாதவர் பார்வை பெறுகிறார். காது கேளாதவர் கேட்கிறார்.'

ஆக, ஒன்றைப் புதியதாக அல்லது மாறுதலாக பார்ப்பது. எடுத்துக்காட்டாக, கோவிலில் என் சேலையில் எண்ணெய் பட்டுவிட்டது என்று வருத்தம் கொள்வதற்கு பதிலாக, 'பரவாயில்லை. சேலையில் நெருப்பு படவில்லை' என்று புதிய பார்வை பெறுவது. நாம் பார்க்கும், கேட்கும் ஒவ்வொன்றும் நம் உள்ளம் செய்யும் விளக்கவுரையே. நாம் எப்படி பார்க்க வேண்டும் என்றும், எதைக் கேட்க வேண்டும் என்றும் நம் மூளைக்கு நாம் பயிற்சி கொடுத்திருக்கிறோம். இந்த பயிற்சியை மறுபரிசீலனை செய்ய வேண்டும். புதிய பொருளைப் பார்க்க, புதிய அர்த்தம் கொடுக்க நாம் அதை தயார் செய்ய வேண்டும். 'மனித மனம் அல்லது மூளைதான் எல்லாம். இவற்றை சரிசெய்தால் எல்லாவற்றையும் சரி செய்துவிடலாம்' என்கிறார் புத்தர். எப்படி? 'நான் 90 மதிப்பெண் பெற்றுள்ளேன். அவன் 95 மதிப்பெண்கள் பெற்றிருக்கிறான்' என்ற மதிப்பீடு அல்லது ஒப்பீடு என் மூளையில் நடக்கிறது. இப்படி நடப்பதால் நான் அவன்மேல் பொறாமை கொள்கிறேன். அவனோடு பேச்சை நிறுத்திக் கொள்கிறேன். என் மகிழ்ச்சியை நான் என் பொறாமைக்கு விற்றுவிடுகிறேன். இரண்டு நாள்கள் கழித்து எனக்குத் தெரிகிறது அவன் பார்த்து எழுதி மதிப்பெண் பெற்றான் என்று. 'நான் உண்மையைக் கடைப்பிடித்தேன்' என்ற பெருமித உணர்வு எனக்குள் வருகிறது. மகிழ்ச்சி திரும்புகிறது. இப்போது சொல்லுங்கள். என் மகிழ்ச்சி எங்கே இருக்கிறது? அவனிலா? மதிப்பெண் தாளிலா? இல்லை. என் மூளையில்தான். ஆக, 'நான் மட்டுமே என்னை மகிழ்ச்சியாக வைக்க முடியும்.' மகிழ்ச்சியை உருவாக்கிக்கொள்வது என் உள்மன வேலைதான்.

2. தற்காலிக இழப்பு - நீண்ட மகிழ்ச்சி

இரண்டாம் வாசகத்தில் விதைப்பவர் உருவகம் பற்றிக் கேட்டோம். விதை விதைக்கும்போது அது ஒரு தற்காலிக இழப்பு உணர்வை தருகிறது. கையில காசு இல்லை. எல்லாக் காசுக்கும் விதை வாங்கி மண்ணுல போட்டாச்சு. வருமா? வராதா? மழை பெய்யுமா? பெய்யாதா? என்ற சந்தேகங்கள் எழுகின்றன. சந்தேகங்கள் வந்தவுடன் நான் மண்ணைக் கிளறி விதையை வெளியே எடுத்துவிடலாமா? அதைவிட பெரிய அறியாமை அல்லது மடமை இருக்க முடியுமா? இல்லை. சில நேரங்களில் நாம் தற்காலிக இழப்புக்களை சந்திக்க நேரலாம். இந்த இழப்புக்களின் போது கொஞ்சம் பொறுமை காத்தால் நாம் நீண்ட விளைச்சலை, நிலையான மகிழ்ச்சியை அறுவடை செய்ய முடியும்.

3. நாணல் - ஆடை

நாணலாக இருப்பதும், மெல்லிய ஆடை அணிந்திருப்பதும் எளிது. ஆனால் இவைகள் மகிழ்ச்சி தருவதில்லை. வாழ்க்கையை நாம் நாணல் போல வாழக்கூடாது. அதாவது, 'இப்படியும் போகலாம். அப்படியும் போகலாம்' என காற்றின் திசையில் செல்வதும், அல்லது அடுத்தவர்களின் பார்வைக்கும், பேச்சுக்கும் ஏற்றாற்போல அலைக்கழிக்கப்படுவதும் சால்பன்று. ஒரு முடிவு எடுத்தால் அந்த முடிவில் நிலைக்க வேண்டும். நாணல் போல வாழ்க்கைக்கு வளைந்து கொடுத்தால் நாம் மற்றவர்களை திருப்திப்படுத்துபவர்களாக இருப்போம். ஆனால் நம் மகிழ்ச்சியை அவர்கள் திருடிக்கொள்வார்கள். அதுபோலவே மகிழ்ச்சி என்பது மெல்லிய ஆடையில் இல்லை. நாம் வைத்திருக்கும் நல்ல, அழகான பொருள்களில் இல்லை. பொருள்கள் மெல்லிய ஆடை போல நைந்துவிடக்கூடியவை. கடந்த வருடம் நாம் பொத்தி பாதுகாத்த பொருள்கள் இந்த வருடம் வேகாரியாக வெளியில் கிடக்கின்றன. ஏன்? ஏனெனில், நாம் வளர்கிறோம். பொருள்கள் வளர்வதில்லை.

4. இறைவனைக் கண்டடைவதில்

எலிசபெத்தம்மாளின் வயிற்றில் யோவான் இருந்தபோது நிறையப்பேர் எலிசபெத்தைக் காணவும், வாழ்த்தவும் வந்திருப்பார்கள். ஆனால், அவர்களில் இயேசுவை, மெசியாவைக் காணாத யோவான், மரியா வந்தவுடன் கண்டுகொள்கிறார். எப்படி? அதற்குக் காரணம் அவரின் எதிர்நோக்கும், கண்டடைதலும். இறைவனின் செயல்களும் அப்படியே. நாம் நினைத்தவுடன் அல்லது நினைப்பதில் எல்லாம் அவரைக் காண வேண்டும் என்று நினைப்பது தவறு. மாறாக, நாம் எதிர்நோக்குடன் இருக்கும்போது அவர் குறித்த நேரத்தில் தன்னை வெளிப்படுத்துகின்றார். அந்த வெளிப்படுத்துதல் நம்மையும் அக்களிப்பால் துள்ளச் செய்கிறது.

5. மகிழ்ச்சியை வாங்கவோ, விற்கவோ வேண்டாம்!

நாம் மகிழ்ச்சி (joy or happiness) என நினைத்து இன்பத்தை (pleasure) வாங்கிவிடுகிறோம். அல்லது இன்பத்திற்கு நம் மகிழ்வை விற்றுவிடுகிறோம். இன்பம் உடனே வரும். சீக்கிரம் போய்விடும். இன்பம் மேலோட்டமானது. அது உடல் சார்ந்தது. அது காணக்கூடியதில் இருக்கிறது. ஆனால் மகிழ்ச்சி. பொறுமையாக வரும். நிலைத்து நிற்கும். மகிழ்ச்சி ஆழமானது. அது உள்ளம் சார்ந்தது. அது கண்காணததில் இருக்கிறது. காண்பவை, கேட்பவை, நுகர்பவை, தொடுபவை, சுவைப்பவை - இவற்றில் இருப்பவை இன்பம். ஆனால், நம் புலன்களுக்குப் புலப்படாத அவரில் இருப்பதுதான் மகிழ்ச்சி. சில நொடியே இன்பம் தரும் மெழுகுதிரிகள் முன், பல ஆண்டுகள் கடந்து நிற்கும் மகிழ்ச்சி என்னும் நிலாவை நாம் விற்றுவிட வேண்டாம்!

ஆக, இன்று நாம் ஏற்றும் ஒளி நம்மை உள்ளொளிப் பயணத்திற்குத் தூண்டுவதாக. அந்தப் பயணத்தின் இறுதியில், குகைகளின் முடிவில் நாம் பாலஸ்தீனத்துப் பாலனின் பால்கண்களில் மின்னித் தெரியும் ஒளியைப் பெற்றுக்கொள்ள முடியும்.

மகிழ்ச்சியை திறக்கவோ, வாங்கவோ, தேய்க்கவோ வேண்டாம்!.

தேடுவோம் - நம் தேடலும், தேடுபொருளும் மெசியாவானால் மகிழ்ச்சியே!

(அருட்தந்தை: யேசு கருணாநிதி)
(Rev. Father: Yesu Karunanidhi)                      
[

Comments

Popular posts from this blog

நீயும் நானும் (ஆழமான அன்புறவினைத்தேடி ......)

திருவருகைக் கால வளையம் - Advent wreath

✠ புனிதர் ஃபிரான்சிஸ் சவேரியார் ✠ (St. Francis Xavier)