எத்தனை முறை மன்னிப்பது?

எத்தனை முறை மன்னிப்பது?

கடந்த நூற்றாண்டில் நம்முடைய இந்தியத் திருநாட்டில் வாழ்ந்த மிகப்பெரிய மகான் ஏகநாதர் என்பவர். அவர் மிகுந்த அன்பிற்கும் பொறுமைக்கும் பெயர்போனவர்.
ஒருநாள் அவர் வழக்கம்போல் காலையில் எழுந்து கோதாவரி ஆற்றில் குளித்துவிட்டு வீடு திரும்பிக் கொண்டிருந்தார். அப்போது அவரைப் பிடிக்காத ஒருவன், தனது வீட்டின் மேல் மாடியிருந்து வாய் கொப்பளித்த நீரை அவர்மீது உமிழ்ந்தான். ஏகநாதர் அவனிடத்தில் எதுவும் பேசவில்லை. மாறாக, மீண்டுமாக கோதாவரி ஆற்றில் குளித்துவிட்டு திரும்பி வந்தார். அப்போதும் ஏகநாதரைப் பிடிக்காத அந்த மனிதன் அவர்மீது உமிழ்ந்தான். இந்த முறையும் ஏகநாதர் அவனிடத்தில் எதுவும் பேசாமல், ஆற்றில் குளித்துவிட்டு தனது வீட்டுக்குத் திரும்பி வந்தார். மறுபடியும் அந்த மனிதன் ஏகநாதர் மீது உமிழ்ந்தான். அப்போதும் ஏகநாதர் அவனிடத்தில் எதுவும் பேசாமல் ஆற்றிற்குச் சென்று குளித்துவந்தார்.
இப்படி அந்த மனிதன் நூற்றுஎட்டு முறை ஏகநாதர்மீது உமிழ்ந்தபோதும், ஏகநாதர் அவனிடத்தில் எதுவும் பேசாமல் ஆற்றிற்குச் சென்று குளித்து வந்தார். இதற்கிடையில் ஏகநாதர்மீது தொடர்ந்து உமிழ்ந்துகொண்டிருந்தவன் சிந்திக்கத் தொடங்கினான், ‘இத்தனை முறை நாம் அவர்மீது உமிழ்ந்தபோதும் அவர் சிறிதும் கோபம் கொள்ளாமல் பொறுமையாக இருக்கிறாரே, உண்மையில் அவர் பெரியவர்’ என உணர்ந்து, அவரிடத்தில் சென்று, அவருடைய காலில் விழுந்து மன்னிப்புக் கேட்டான். அப்போது ஏகநாதர் அவனிடம், “இதில் மன்னிப்பதற்கு என்ன இருக்கின்றது?. ஒவ்வொருமுறையும் நீ என்மீது உமிழ்ந்தபோது, நான் ஆற்றிற்குச் சென்று குளித்துவந்தான். இவ்வாறு நீ நூற்று எட்டு முறை என்மீது உமிழ்ந்தாய், நானும் அதன்பொருட்டு நூற்று எட்டு முறை ஆற்றிற்குச் சென்று குளித்து வந்தான். ஒருவகையில் நீதான் எனக்கு புண்ணியத்தைப் பெற்றுத் தந்திருக்கின்றாய். அதன்பொருட்டு உனக்கு நன்றி” என்று பெருந்தன்மையாகப் பேசிவிட்டு, அங்கிருந்து நகர்ந்து சென்றார்.
ஏகநாதரைப் பிடிக்காதவன், அவர்மீது நூற்றுஎட்டு முறை உமிழ்ந்தபோதும் அவர் அவனை மன்னித்து, அவனிடம் பெருந்தன்மையாக நடந்துகொண்டது மிகவும் வியப்புக்குரியதாக இருக்கின்றது. மன்னிப்பு என்பது சாதாரண வார்த்தை கிடையாது, அது மனுக்குலத்தை மாண்புறச் செய்யும் ஓர் உயிருள்ள சக்தி.

நற்செய்தி வாசகத்தில், சீமோன் பேதுரு இயேசுவிடம் வந்து, “ஆண்டவரே, என் சகோதரர் சகோதரிகளுள் ஒருவர் எனக்கு எதிராகப் பாவம் செய்தால், நான் எத்தனை முறை மன்னிக்க வேண்டும்? ஏழு முறை மட்டுமா?” என்று கேட்கின்றார். அதற்கு இயேசு அவரிடம், “ஏழு முறை மட்டுமல்ல; எழுபது தடவை ஏழு முறை” என்று சொல்கின்றார். சீமோன் பேதுரு இயேசுவிடத்தில் கேட்ட கேள்வியும் அதற்கு இயேசு சொன்ன பதிலும் நமது ஆழமான சிந்தனைக்குரியதாக இருக்கின்றது.
பேதுரு இயேசுவிடத்தில், தனக்கு எதிராகப் பாவம் செய்யும் சகோதர சகோதரரை ஏழு முறை மன்னிக்க வேண்டுமா? என்று கேட்பதன் உள்நோக்கம் இயேசு அவரைப் பாராட்டவேண்டும் என்பதுதான். எப்படி என்றால், யூத சமயம் தவறு செய்யும் ஒருவரை மூன்றுமுறை மன்னித்தாலே போதுமானது என்று சொல்லிவந்தது. பேதுரு இதனை உள்வாங்கிக்கொண்டு மூன்றோடு மூன்றைக் கூட்டி, இன்னும் அதனோடு ஒன்றைக் கூட்டி, பெருந்தன்மையாக ஏழுமுறை மன்னிக்க வேண்டுமா? என்று கேட்கிறார். அதற்கு இயேசு அவரிடம், ஏழுமுறை மட்டுமல்ல, எழுபது தடவை ஏழுமுறை” என்று சொல்லிவிட்டு நிபந்தனை இல்லாமல் மன்னிக்கவேண்டும் என்று சொல்கின்றார். அதனை விளக்கும்பொருட்டு ஓர் உவமையையும் சொல்கின்றார்.
ஆண்டவர் இயேசு இவ்வாறு சொல்வதற்குக் காரணம், இஸ்ரயேல் மக்கள் எத்தனைமுறையோ தவறு செய்தாலும் அத்தனை முறையும் தந்தையாம் கடவுள் அவர்களை மன்னித்து ஏற்றுக்கொண்டார். எனவே அவரைப் போன்று நாமும் நமக்கு எதிராகப் பாவம் செய்பவர்களை மன்னிக்க வேண்டும் என்பதுதான். மத்தேயு நற்செய்தி 5:48 ல் இயேசு கூறுவார், “உங்கள் விண்ணகத் தந்தை நிறைவுள்ளவாராய் இருப்பது போன்று, நீங்களும் நிறைவுள்ளவர்களாய் இருங்கள்” என்று. தந்தைக் கடவுளை நிறைவுள்ளவராக இருக்கச் செய்வது, அவருடைய அளவுகடந்த பொறுமையும் அளவுகடந்த மன்னிப்பும்தான். நாமும் தந்தைக் கடவுளைப் போன்று நமக்கு எதிராகத் தீங்கு செய்வோரை மன்னிக்கின்றபோது நாமும் நிறைவுள்ளவர்களாவோம் என்பது உறுதி.
ஆகவே, இறைவழியில் நடக்கும் நாம், இறைவனைப் போன்றே மன்னிப்பதில் தாராளமாக இருப்போம். அதன்வழியாக இறையருள் நிறைவாய் பெறுவோம்.


மரிய அந்தோனிராஜ்

Comments

Popular posts from this blog

நீயும் நானும் (ஆழமான அன்புறவினைத்தேடி ......)

திருவருகைக் கால வளையம் - Advent wreath

✠ புனிதர் ஃபிரான்சிஸ் சவேரியார் ✠ (St. Francis Xavier)