தவக்காலம் முதல் ஞாயிறு YEAR - 02

தவக்காலம் முதல் ஞாயிறு
(தொநூ 9: 8-15, 1 பேதுரு 3:18- 22, மாற் 1: 12-15)
சோதனைகளை வெல்வோம்!
உரோமை சாம்ராஜ்யம் உலகிற்குத் தந்த மிகச் சிறந்த பேச்சாளர் மார்க் ஆண்டனி. அவர் ஒரு மிகச் சிறந்த பேச்சாளர் மட்டும் கிடையாது, புத்திக் கூர்மையானவர், பெரிய போர்வீரர், எதற்கும் அஞ்சாதவர், உறுதியானவர். இப்படி பல்வேறு திறமைகள் வாய்க்கப்பட்ட மார்க் ஆண்டனி மட்டும் நினைத்திருந்தால் உலகில் தோன்றிய பேரரசர்களில் தலைசிறந்த ஒருவராகத் திகழ்திருக்க முடியும். ஆனால், அவரால் அப்படித் திகழ முடியவில்லை. காரணம் அவரிடம் இருந்த பலவீனம், சோதனைக்கு எளிதாய் விழுந்துவிடக்கூடிய தன்மை.
ஒருமுறை அவருடைய உதவியாளர் அவரைப் பார்த்துச் சொன்னார், (Oh, Marcus, oh colossal Child! Able to conquer the world, but unable to resist a temptation) உலகை வெல்ல முடிந்த உன்னால், உனக்கு வந்த சோதனையை வெல்ல முடியவில்லையே”. மார்க் ஆண்டனி மட்டும் தனக்கு வந்த சோதனைகளை - மாதுவிடம் விழாமல் - வெற்றி கொண்டிருந்தார் என்றால், உலக வரலாற்றில் பெரிய பேரரசராகத் திகழ்ந்திருக்கலாம், சோதனைகளை வெல்ல முடியாததால், அவர் ஒரு சதாரண மனிதரைப் போன்று மாண்டு போனார்.
தவக்காலத்தின் முதல் ஞாயிறான இன்று நாம் படிக்கக்கேட்ட வாசகங்கள் சோதனைகளை வெல்வோம் என்னும் சிந்தனையை நமக்கு வழங்குகின்றன. நாம் எப்படி நம்முடைய வாழ்வில் வரக்கூடிய சோதனைகளை வென்று, இறைவனின் அன்பு மக்களாக வாழலாம் என்று இன்றைய இறைவார்த்தையின் ஒளியிலே சிந்தித்துப் பார்ப்போம்.
மனிதர்களாகிய நாம் வலுக்குறைந்தவர்களாக; பலவீனமானவர்களாக இருந்தாலும், நமக்கு வருகின்ற சோதனைகளை வெற்றிகொள்கின்ற ஆற்றல் இல்லாதவர்கள் இல்லை. யாராரெல்லாம் தங்களுடைய வாழ்க்கையில் வருகின்ற சோதனைகளை வெற்றி கொள்பவர்களாக இருக்கின்றார்களோ அவர்கள் எல்லாம் வரலாற்றில் உயர்ந்தவர்களாகவும், எல்லாராலும் போற்றப்படக்கூட மக்களாகவும் இருக்கின்றார்கள், அதே நேரத்தில் யாராரெல்லாம் தங்களுடைய வாழ்க்கையில் வருகின்ற சோதனைகளை வெற்றிகொள்ள நெஞ்சுரம் இல்லாமல் இருக்கின்றார்களோ அவர்கள் எல்லாரிலும் தாழ்ந்து போகின்றார்கள் என்பது உண்மையாக இருக்கின்றது. தங்களுடைய வாழ்க்கையில் வந்த சோதனைகளை வெற்றிகொண்ட பல மனிதர்கள் இருந்தாலும், அவர்களில் எல்லாம், மிக மேலான இடத்தில் இருப்பவர் நம் ஆண்டவர் இயேசு கிறிஸ்துதான். ஆண்டவர் இயேசு தனக்கு வந்த சோதனைகளை எப்படி வெற்றிகொண்டார் என்றும், அவர் வழியில் நடக்கும் நாம் எப்படி நமக்கு வரும் சோதனைகளை வெற்றிகொள்ளப் போகின்றோம் என்றும் இப்போது பார்ப்போம்.
மாற்கு நற்செய்தியில் இயேசு திருமுழுக்கு பெற்றபின், தூய ஆவியால் பாலை நிலத்திற்கு அனுப்பி வைக்கப்படுகின்றார். இங்கே ஓர் உண்மையை நாம் உணர்ந்துகொள்ளவேண்டும். அது என்னவென்றால், இயேசு திருமுழுக்குப் பெற்றபோது எந்த ஆவி இயேசுவின் மீது இறங்கி வந்ததோ, அதே ஆவியால்தான் இயேசு பாலை நிலத்திற்கு அனுப்பி வைக்கப்படுகின்றார், பாலை நிலத்தில் இயேசு நாற்பது நாட்கள் நோன்பிருக்கின்றார், சாத்தானால் சோதிக்கப்படுகின்றார். ஆகையால் இயேசுவுக்கு வந்ததுபோன்று சோதனை எல்லாருக்கும் வரலாம். அந்த சோதனையை நாம் எவ்வாறு கைக்கொள்கின்றோம் என்பதைப் பொறுத்துத்தான் நம்முடைய வாழ்வும் தாழ்வும் அடங்கி இருக்கின்றது என்பது நாம் உணர்ந்துகொள்ளவேண்டிய முதன்மையான செய்தியாக இருக்கின்றது.
ஆண்டவர் இயேசுவுக்கு கல்லை அப்பமாக மாற்றுவதற்கான சோதனையும், சாத்தானை வணங்க வேண்டிய சோதனையும், எருசலேம் திருக்கோவிலின் மேலிருந்து கீழ குதிக்கக்கூடிய சோதனையும் இன்னும் பணிவாழ்வில் பல்வேறு விதமான சோதனைகளும் வந்தன. அந்த சோதனைகளில் ஆண்டவர் இயேசு விழுந்துவிடவில்லை. அவற்றையெல்லாம் அவர் இறைவனின் துணியோடு வெற்றிகொண்டார் என்பது உண்மையாக இருக்கின்றது. நாம் நமக்கு வருகின்ற சோதனைகளை எப்படி கையாளுகின்றோம் என்பதுதான் நாம் சிந்தித்துப் பார்க்கவேண்டிய அடுத்த செய்தியாக இருக்கின்றது.
இணைச்சட்ட நூல் 30:15 ல் வாசிப்பதுபோல நமக்கு முன்பாக வாழ்வும், சாவும், நன்மையையும் தீமையும் வைக்கப்பட்டுள்ளது. நாம் வாழ்வின் வழியில் அதாவது இறைவழியில் நடந்தோம் என்றால் நமக்கு ஆசிர், அதே நேரத்தில் சாவின் வழியில் நடந்தோம் என்றால் நமக்கு அழிவு என்பதே உண்மை. நாம் செல்லும் வழி வாழ்வின் வழியா? அல்லது வாழ்வில் வருகின்ற சோதனைகளுக்கு அடிபணிந்து செல்லக்கூடிய வழியா சாவின் வழியா? என்று நாம் சிந்தித்துப் பார்த்துக்கொள்ளவேண்டும்.
முன்னாள் அமெரிக்க அதிபர் ஜேம்ஸ் கார்பீல்ட் (James Garfield) அவர்களுடைய வாழ்க்கையில் நடைபெற்ற நிகழ்வு.
ஜேம்ஸ் கார்பீல்டுக்கு பல முறைகேடான வழிகளில் பணம் சேகரிப்பதற்கான சூழல்கள் எல்லாம் அமைந்தன. ஆனால் அவர் அப்படியெல்லாம் பணம் சேகரிக்கவில்லை. அவருக்கு மிக நெருக்கமான நண்பர் ஒருவரிடம், “நீங்கள் இப்படி குறுக்கு வழியில் பணத்தை அடித்தால் அது யாருக்குத் தெரியப் போகின்றது?” என்று கேட்டார். அதற்கு அவர், “யாருக்கும் தெரியாதுதான். ஆனால் என்னுடைய மனசாட்சிக்குத் தெரியும். நான் முறைகேடான வழியில் பணம் சேகரித்திருக்கின்றேன். அது என்னை ஒவ்வொருநாளும் தூங்கவிடாமல் செய்துவிடும்” என்று மிக பொறுமையாகக் கூறினார்.
ஆம், ஜேம்ஸ் கார்பீல்டுக்கு பணம் சேகரிப்பதற்கான பல்வேறு வாய்ப்புகள், சூழல்கள் அமைந்தாலும், அந்த சோதனைகளில் எல்லாம் விழாமல், மன உறுதியாக இருந்தது நமது ஆழமான சிந்தனைக்குரியதாக இருக்கின்றது.
நம்முடைய வாழ்க்கையில் பல்வேறு விதங்களில் சோதனைகள் வரலாம். அச்சோதனைகளை நாம் மூன்று தலைப்புகளுக்குள் அடக்கி விடலாம். முதலாவது விதமான சோதனை உணவு தொடர்பானது. மனிதர்களில் நிறையப் பேர் உணவைப் பார்த்தவுடன், எல்லாவற்றையும் மறந்துபோய் சோதனையில் விழக்கூடியவர்களாக இருக்கின்றார்கள் என்பது வேடிக்கையான உண்மை. ஆதிப் பெற்றோர் விளக்கப்பட்ட மரத்தின் கனியை – உணவை – உண்டு சோதனையில் விழுந்து பாவம் செய்தார்கள். ஈசாக்கின் புதல்வர்களில் மூத்தவனாகிய ஏசா ஒரு கலயம் கஞ்சிக்கு ஆசைப்பட்டு, சோதனையில் விழுந்துவிடுகின்றான். இது போன்று பல்வேறு மனிதர்கள் உணவின்மீது ஆசைப்பட்டு, சோதனையில் விழுந்து பாவம் செய்கின்றவர்களாக இருக்கின்றார்.
அடுத்ததாக வரக்கூடிய சோதனை பணம்/ பொருள் தொடர்பானது. இயேசுவின் சீடர்களில் ஒருவனாகிய யூதாஸ் 30 வெள்ளிக்காசுக்கு ஆசைப்பட்டு, சோதனையில் விழுந்தது மிகவும் துரதிஸ்டவசமானது, யூதாசைப் போன்று பலர் பணத்தைப் பார்த்தவுடன், அதனை எப்படியாவது அபகரிக்கவேண்டும் என்ற சோதனையில் விழுந்து அழிந்துபோகின்றார்கள். உண்மைச் செல்வமான இயேசுவை, இறைவனை விட்டுவிட்டு, போலியான செல்வமாகிய பணத்திற்காக வாழ்வைத் தொலைப்பது மிகவும் வேடிக்கையானது.
மூன்றாவது வரக்கூடிய சோதனை அதிகாரம், அந்தஸ்து தொடர்பானது. இயேசுவின் சீடர்கள் தங்களுக்குள் யார் பெரியவர், யார் முதன்மையான இடத்தை வகிப்பது என்று விவாதித்தது கூட ஒருவிதமான சோதனைதான். இன்றைக்கு நிறையப் பேர் தங்களுக்கு அதிகாரம் கிடைக்கவேண்டும், அந்தஸ்து, பதவி கிடைக்கவேண்டும் என்பதற்காக சோதனையில் விழுந்து அழிந்து போவதை நாம் கண்கூடாகப் பார்க்கின்றோம். இத்தகைய சோதனைகளை எல்லாம் துணிவோடு எதிர்கொண்டு வெற்றிகொள்பவர்தான் கடவுளுக்கு ஏற்புடையவர் ஆவார் என்பது உறுதி. ஆண்டவர் இயேசுவோ மேலே சொல்லப்பட்ட மூன்று விதமான சோதனைகளையும் துணிவோடு எதிர்கொண்டு வெற்றிகொண்டார் என்பது நாம் நம்முடைய கவனத்தில் கொள்ளவேண்டியதொன்றாக இருக்கின்றது. இயேசுவைப் போன்று இறைவனின் துணைகொண்டு நம்முடைய வாழ்கையைக் அமைத்துக்கொண்டால் எப்படிப்பட்ட சோதனையையும் எளிதாய் வெற்றிகொள்ளலாம் என்பது உறுதி.
இன்றைய நற்செய்தியின் இறுதியில் ஆண்டவர் இயேசு காட்டு விலங்குகளிடையே இருந்தார். வானதூதர் அவருக்குப் பணிவிடை செய்தனர் என்று வாசிக்கின்றோம். இதற்கு விவிலிய அறிஞர்கள் இரண்டு விதமான விளக்கங்களைத் தருகின்றார்கள். ஒன்று இயேசு காட்டு விலங்குகளிடையே இருந்தார் என்பது இயேசு மனிதருக்கும் உயிரினங்களுக்கும் இடையே நல்லுறவை ஏற்படுத்த வந்தார் என்று சொல்வார்கள். இறைவாக்கினர் ஒசியா (2: 18), இறைவாக்கினர் எசாயா ( 11: 6-9) போன்றோர் மெசியா வருகின்றபோது மனிதருக்கும் உயிரனங்களுக்கும் இடையே எப்படிப்பட்ட அற்புதமான உறவு நிகழ்வும் என்பதை மிக அருமையாக எடுத்துரைக்கின்றார்கள். இயேசு காட்டு விலங்குகளோடு இருந்ததை அப்படித் தான் நாம் புரிந்துகொள்ளவேண்டும்.
இரண்டாவதாக இயேசு பாலைநிலத்தில் இருந்தபோது வானதூதர்கள் அவருக்குப் பணிவிடை செய்தார்கள் என்பதற்கு விவிலிய அறிஞர்கள் கூறுகின்ற செய்தி, இறைவன் நம்முடைய துன்ப நேரத்தில் நம்மைக் கைவிட்டு விடாமல், நமக்கு உதவி செய்ய வருவார் என்று விளக்கம் தருவார்கள். ஆகையால், நம்முடைய சோதனை நேரத்தில் நாம் தனித்திருக்கின்றோம் என்று எண்ணாமல், இறைவனை நம்முடைய துணைக்கு அழைத்தால், சோதனைகளை எளிதாய் வெற்றி கொண்டு விடலாம் என்பதுதான் நிஜம்.
எனவே, நம்முடைய வாழ்வில் வரும் சோதனைகளில் வீழ்ந்து விடாமல், இறைவனின் துணைகொண்டு துணிவோடு அதனை எதிர்கொண்டு, வெற்றிகொள்வோம். இறைவனுக்கு உகந்த வழியில் நடப்போம். அதன்வழியாக இறையருள் நிறைவாய் பெறுவோம்.
- Fr. Maria Antonyraj, Palayamkottai

Comments

Popular posts from this blog

நீயும் நானும் (ஆழமான அன்புறவினைத்தேடி ......)

திருவருகைக் கால வளையம் - Advent wreath

✠ புனிதர் ஃபிரான்சிஸ் சவேரியார் ✠ (St. Francis Xavier)