தவக்காலம் நான்காம் ஞாயிறு Year 2

தவக்காலம் நான்காம் ஞாயிறு

(குறி 36: 14 -16, 19-23; எபே 2: 4-10 ; யோவா 3: 14-21)
நம் மீட்புக்காக தம் ஒரே மகனையே கையளித்த அன்பின் ஊற்று இறைவன்!
சில நூறு ஆண்டுகளுக்கு முன்பாக ஸ்பெயின் நாட்டின் மன்னராக இருந்தவர் அல்போன்சோ என்பவர். நீதி வழுவாமல் பொற்கால ஆட்சியை மக்களுக்கு வழங்கியதால், மக்களால் இன்றும் அவர் நினைவு கூரப்படுகின்றார். ஸ்பெயின் நாட்டை அல்போன்சோ ஆட்சி செய்த சமயத்தில் முகமதியர்களுக்கும் கிறிஸ்தவர்களுக்கும் இடையே பயங்கரச் சண்டை நடைபெற்றுக்கொண்டிருந்தது. ஒரு சமயம் முகமதியர்கள் சிலர் மாறுவேடத்தில் ஸ்பெயின் நாட்டுக்குள் புகுந்து, மன்னரின் மகனை அதாவது இளவரசரைக் கடத்திக்கொண்டு போய் அவர்களுடைய நாட்டில் வைத்துக்கொண்டனர். இளவரசர் கடத்தப்பட்ட செய்தியைக் கேட்டு மன்னர் மனமுடைந்து போனார்.
இச்சம்பவம் நடந்த சில நாட்கள் கழித்து, முகமதியர்களிடமிருந்து மன்னருக்கு ஓர் ஓலை வந்தது. அந்த ஓலையில், “உனக்கு உன்னுடைய மகன் வேண்டுமா? இல்லை உன்னுடைய மக்கள் வேண்டுமா? மகன் வேண்டும் என்றால், நாங்கள் நாட்டின் மீது படையெடுத்து வந்து, மக்களைக் கொன்றொழிப்போம். இல்லை உனக்கு மக்கள்தான்வேண்டும் என்றால், உன்னுடைய மகனைக் கொன்றொழிப்போம்” என்று எழுதி இருந்தது. அந்த ஓலையைப் படித்தபோது மன்னர் ஒருகணம் அதிர்ந்து போய்விட்டார். மன்னரைச் சுற்றி அரசபையினர் இருந்தனர். மன்னர் என்ன முடிவெடுக்கப்போகின்றார் என்று பார்த்துக்கொண்டே இருந்தனர்.
அப்போது மன்னர் அரசபையில் இருந்த எழுத்தரை தன் அருகே அழைத்து, அவரிடம் “என்னுடைய மகனை நீங்கள் என்ன வேண்டுமானாலும் செய்யுங்கள், ஆனால், நாட்டு மக்களை நீங்கள் ஒன்றும் செய்யாதீர்கள்” என எழுதுமாறு கேட்டுக்கொண்டார். எழுத்தரும் மன்னர் சொன்னவாறே ஓலை எழுதி, அதனை முகமதியர்களுக்கு அனுப்பி வைத்தார். மன்னர் எடுத்த இந்த முடிவினை அறிந்து அரசபையினர் மட்டுமல்லாமல், நாட்டு மக்களே திகைத்துப் போனார்.
மக்களுக்காக தன் மகனையே கையளித்த மன்னர் அல்போன்சோவின் தியாகச் செயல் உண்மையில் நம்மை வியக்க வைப்பதாக இருக்கின்றது. எப்படி மன்னர் அல்போன்சோ மக்களுக்காக தன்னுடைய மகனையே கையளித்தாரோ, அதுபோன்று தந்தையாம் கடவுளும் தன் ஒரே மகன் இயேசு கிறிஸ்துவை நமக்காக, நம்முடைய மீட்புக்காகக் கையளித்து தான் பேரன்பின் ஊற்று என்பதை நமக்கு நிரூபித்துக் காட்டுகின்றார்.
தவக்காலத்தின் நான்காம் ஞாயிறான இன்று நாம் படிக்கக் கேட்ட வாசகங்கள் ‘கடவுளின் பேரன்பை’ நமக்கு எடுத்துக் கூறுவதாக இருக்கின்றது. யோவான் எழுதிய நற்செய்தி நூலிலிருந்து எடுக்கப்பட்ட இன்றைய நற்செய்தி வாசகத்தில் ஆண்டவர் இயேசு, “தம் ஒரே மகன்மீது நம்பிக்கை கொள்ளும் எவரும் அழியாமல் நிலைவாழ்வு பெரும் பொருட்டு, அந்த மகனையே அளிக்கும் அளவுக்குக் கடவுள் உலகின்மேல் அன்புகூர்ந்தார்” (யோவா 3: 16) என்கின்றார். இயேசுவின் இவ்வார்த்தைகள் கடவுள் எந்தளவுக்கு பேரன்பு கொண்டவராக இருக்கின்றார் என்பதை மிகத் தெளிவாக எடுத்துரைக்கின்றது. இந்த இடத்தில் பவுலடியார் உரோமையருக்கு எழுதிய திருமுகத்தில் கூறுகின்ற வார்த்தைகளை இணைத்துச் சிந்தித்துப் பார்த்தால் இன்னும் பொருள் நிறைந்ததாக இருக்கும். “நேர்மையாளருக்காக ஒருவர் தம் உயிரைக் கொடுக்கத் துணியலாம். ஆனால், நாம் பாவிகளாய் இருந்தபோதே கிறிஸ்து நமக்காகத் தம் உயிரைக் கொடுத்தார். இவ்வாறு கடவுள் நம்மீது கொண்டுள்ள தம் அன்பை எடுத்துக் காட்டியுள்ளார்” என்பார் அவர் (உரோ 5: 7-8). ஆம், எல்லாரும் வாழ்வு பெறவேண்டும் அதுதான் கடவுளின் திருவுளமாக இருக்கின்றது, அங்குதான் கடவுளின் பேரன்பும் விளங்குவதாக இருக்கின்றது.
இரண்டு குறிப்பேடு புத்தகத்திலிருந்து எடுக்கப்பட்ட இன்றைய முதல் வாசகம் கடவுளின் பேரன்புக்குச் சாட்சியாக விளங்குகின்றது. எகிப்தில் அடிமைப்பட்டுக் கிடந்த இஸ்ரயேல் மக்களை கடவுள் மீட்டெடுத்து, அவர்களுக்குப் பாலும் தேனும் பொழியக்கூடிய கானான் தேசத்தை வழங்கினார். அது மட்டுமல்லாமல், அவர்களை நல்வழியில் வழி நடத்துவதற்கு நீதித் தலைவர்கள், அரசர்கள், இறைவாக்கினர்களை எல்லாம் கொடுத்தார். ஆனால், அவர்களோ தங்களுக்கு எண்ணில்லா நன்மைகளைச் செய்த யாவே கடவுளை வழிபடுவதை மறந்துவிட்டு, ஓய்வுநாளை ஒழுங்காகக் கடைபிடிக்காமல் போலி தெய்வங்களை, பாகாலை வழிபடத் தொடங்கினார்கள். அதோடு தங்களுக்கு இறைவார்த்தையை எடுத்துச் சொன்ன இறைவாக்கினர்களையும் அவர்கள் கொடுமைப்படுத்தினார்கள். இதனால் சினம்கொண்ட கடவுள் அவர்களை பாபிலோனியர்களின் கையில் ஒப்புவிக்கின்றார். அங்கு அவர்கள் எழுபது ஆண்டுகள் அடிமைகளாய் வாழப் பணிக்கின்றார். இவ்வாறு தனக்குக் கீழ்படியாத இஸ்ரயேல் மக்கள் இனத்தை அவர் கடுமையாகத் தண்டிக்கின்றார்.
இது ஒரு பக்கம் இருக்க, மக்கள் என்னதான் தன்னுடைய அன்பை மறந்து, வேற்று தெய்வங்களை வழிபட்ட போதும், ஒருகட்டத்தில் அவர்கள் தங்களுடைய குற்றங்களை உணர்ந்து, மனம் வருந்தி, தன்னை நோக்கி மன்றாடுகின்றபோது, கடவுள் அவர்களை மன்னித்து ஏற்றுக்கொள்கின்றார். மேலும் புறவினத்தைச் சார்ந்த சைரஸ் மன்னன் வழியாகச் செயல்பட்டு, இஸ்ரயேல் மக்களை அவர்களுடைய சொந்த நாட்டிற்கு கூட்டி வருகின்றார். இவ்வாறாக கடவுள் மன்னிகின்றவராக, பேரன்பு கொண்டவராகத் திகழ்கின்றார். தவறு செய்த மக்கள் அப்படியே ஒழிந்துபோகட்டும் என்பதல்ல, மாறாக அவர்கள் மனம்வருந்தி, திருந்தி வருகின்றபோது அவர்களை மன்னித்து ஏற்றுக்கொள்வதுதான் கடவுளின் சித்தமாக இருக்கின்றது.
தூய பவுல் எபேசியருக்கு எழுதிய திருமுகத்திலிருந்து எடுக்கப்பட்ட இன்றைய இரண்டாம் வாசகம் கூட, கடவுளின் அன்பையும் அவருடைய இரக்கத்தையும் தான் நமக்கு எடுத்துக்கூறுவதாக இருக்கின்றது. “கடவுள் மிகுந்த இரக்கமுடையவர். அவர் நம்மீது மிகுந்த அன்பு கொண்டுள்ளார். குற்றங்களின் காரணமாய் இறந்தவர்களாயிருந்த நாம் அவ்வன்பின் மூலம் இணைந்து உயிர்பெறச் செய்தார். நீங்கள் மீட்கப்பட்டிருப்பது அந்த அருளாலேயே ( 2: 4,5) என்பார் பவுலடியார். இங்கே பவுலடியார் கடவுளின் அன்பையும் இரக்கத்தையும் ஆழமாக வலியுறுத்தும் அதே வேளையில் நாம் மீட்படைந்திருப்பது நம்முடைய செயலால் அல்ல, கடவுளின் மேலான அருளால் என்பதை மிகத் தெளிவாக எடுத்துரைக்கின்றார். ஆகவே, நாம் மீட்கப்பட்டிருப்பது குறித்தோ, வாழ்வினைக் கொடையாகப் பெற்றுக்கொண்டிருப்பது குறித்தோ பெருமை பாராட்டுவதற்கு நமக்கு எந்தவிதத் தகுதியும் இல்லை என்பதுதான் உண்மை. ஏனெனில், நாம் மீட்படைந்திருப்பதே கடவுளின் அருளினாலும் அவருடைய பேரன்பினாலும்தான்.
பவுலடியார் கடவுளின் மீட்புச் செயலைப் பற்றிப் பேசுகின்ற அதே வேளையில், நம்முடைய கடமையும் பற்றிப் பேசுகின்றார். “நாம் நற்செயல் புரிவதற்கென்றே கிறிஸ்து இயேசு வழியாய்ப் படைக்கப்பட்டிருக்கின்றோம். இவ்வாறு நற்செயல்கள் புரிந்து வாழும்படி கடவுள் முன்கூட்டியே ஏற்பாடு செய்திருக்கின்றார்” என்பார் அவர். ஆகையால், இறையருளால் சாவிலிருந்தும், அழிவிலிருந்தும் மீட்கப்பட்டிருக்கின்ற நாம், அதற்குக் கைமாறாக நற்செயல் புரிவதுதான் கடவுளுக்கு ஏற்புடைய செயலாகும் என்பதாகும் என்பது பவுலடியாரின் ஆழமான செய்தியாக இருக்கின்றது.
இறையருளால் மீட்கப்பட்டிருக்கும் நாம், நம்முடைய வாழ்க்கையில் நற்செயல் செய்கின்றோமா? என்று சிந்தித்துப் பார்க்கவேண்டும். மத்தேயு நற்செய்தியில் ஆண்டவர் இயேசு கூறுவார், “உங்கள் நற்செயல்களைக் கண்டு உங்கள் விண்ணகத் தந்தையைப் போற்றிப் புகழ்வார்கள்” என்று (மத் 5:16). ஆம், இறையருளால், கடவுளின் பேரன்பால் மீட்கப்பட்டிருக்கும் நாம் நற்செயல் புரிகின்ற வாழ்க்கையை வாழ்கின்றபோது அது கடவுளுக்குப் பெருமை சேர்ப்பதாக இருக்கும் என்பதில் எந்தவொரு மாற்றுக்கருத்தும் கிடையாது.
முன்னாள் அமெரிக்க அதிபர் கிளீவ்லான்ட் (Cleveland) அவர்களைப் பற்றிச் சொல்லப்படும் ஓர் அற்புதமான நிகழ்வு. ஒரு சமயம் கிளீவ்லான்டின் வாழ்க்கை வரலாற்றைச் எழுதிய ரிச்சர்ட் டபிள்யு கில்டர் (Richard W. Gilder) என்பவர் இரயிலிலே பயணம் செய்துகொண்டிருந்தார். அவர் பயணம் செய்த அதே இரயிலில் அதிபர் கிளீவ்லாண்டும் பயணம் செய்கின்றார் என்று கேள்விப்பட்ட கில்டர், அவரிடத்தில் ஒரு முக்கியமான செய்தியைச் சொல்வதற்காக அவரைத் தேடிப் போனார். அவர் எவ்வளவோ தேடியும் அதிபர் எங்கு இருக்கின்றார் என்பதை அவரால் கண்டுகொள்ளவே முடியவில்லை. கடைசியில் அவர் பயணச் சீட்டு பரிசோதகரிடம் சென்று, அதிபர் கிளீவ்லாண்ட் எங்கு இருக்கின்றார் என்று கேட்டார். அதற்கு அவர் அந்த இரயிலில் பயணிகளின் பொருட்களை, மூட்டை முடிச்சுகளை சுமந்து செல்லும் இரயில் பெட்டியை (Baggage Car) சுட்டிக்காட்டினார். கில்டர் ஒரு நிமிடம் அதிர்ந்து போய் நின்றார். பயணிகளின் பொருட்களை, மூட்டை முடிச்சுகளைச் சுமந்து செல்லும் பெட்டியில் அதிபர் என்ன செய்கின்றார் என்று கில்டர் கனத்த இதயத்தோடு அங்கு சென்றார். அங்கே அவர் கண்ட காட்சி அவரை அதிர்ச்சிக்குள்ளாக்கியது. ஆம், அதிபர் அவர்கள் பயணிகளின் மூட்டை முடிச்சுகளின் மீது அமர்ந்து சன்னல் வழியாக வெளியே பார்த்துக்கொண்டிருந்தார்.
அப்போது கில்டர், “அதிபர் அவர்களே! இங்கு என்ன செய்கின்றீர்கள்?” என்று கேட்டார். அதற்கு அவர், “இளம்பெண் ஒருத்தி கைக்குழந்தையுடன் இந்த இரயிலில் ஏறினாள். ஏற்கனவே, இரயிலில் கூட்டம் நிரம்பி வழிந்தது. அவருக்கு இடம் கொடுக்க யாரும் முன்வரவில்லை. அதனால்தான் நான் என்னுடைய இருக்கையை அவளுக்குக் கொடுத்துவிட்டு, இங்கு வந்து அமர்ந்து கொண்டேன்” என்றார். அதிபரின் இவ்வார்த்தைகளைக் கேட்ட கில்டர் கண்கலங்கிப் போனார். கிளீவ்லாண்ட் தான் அமெரிக்க அதிபர் என்றெல்லாம் பாராது, கைக்குழந்தையோடு இருந்த பெண்மணிக்கு உதவி செய்தது, நற்செயல் புரிந்தது நம்மை வியக்கவைப்பதாக இருக்கின்றது. கடவுளின் அன்பால், அருளால் மீட்கப்பட்டிருக்கும் நாம் ஒவ்வொருவரும் நற்செயல் செய்து வாழவேண்டும் என்பதுதான் அவருடைய திருவுளமாக இருக்கின்றது.
எனவே, நாம் கடவுளின் பேரன்பையும் அவருடைய இரக்கத்தையும் உணர்ந்தவர்களாய், நற்செயல் புரிகின்ற வாழ்க்கை வாழ்வோம். அதன்வழியாக இறையருள் நிறைவாய் பெறுவோம்.


Comments

Popular posts from this blog

நீயும் நானும் (ஆழமான அன்புறவினைத்தேடி ......)

திருவருகைக் கால வளையம் - Advent wreath

✠ புனிதர் ஃபிரான்சிஸ் சவேரியார் ✠ (St. Francis Xavier)